

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி செப்.7-ம் தேதி நடைபெற உள்ளது.
கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டுப் பெருவிழா தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த 10 நாட்களிலும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வந்து அன்னையை வணங்கிச் செல்வார்கள்.
அந்த வகையில் இந்தாண்டு ஆண்டுப் பெருவிழா, நாளை (ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, நாளை மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின்னர், கொடி ஊர்வலம் புறப்படும்.
பின்னர் கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து திருத்தல கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி நிறைவேற்றுதல் ஆகியவை நடைபெறும்.
மறுநாள் 30-ம் தேதி முதல் செப்.7-ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், மேல்கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கனி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. செப்.1-ம் தேதி சிலுவைப் பாதை ஊர்வலம் நடைபெறும்.
விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி செப்.7-ம் தேதி நடைபெற உள்ளது. செப்.8-ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு, அன்று காலை தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. பின்னர் கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.