

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டு தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொங்கியது. தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்களுடன் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருளினர். பின்னர் காலை 6.45 மணிக்குச் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சுமார் 63 அடி உயரமுள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றினர்.
அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற தீபத் திருவிழா கொடியேற்றத்தில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள்.
அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். விழாவின் முதல் நாளான நேற்று காலை பஞ்ச மூர்த்திகள் வெள்ளி விமானங்களில் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி, அதிகார நந்தி, ஹம்சம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவின் 6-ம் நாள் விழாவான நவ.20-ம் தேதி 63 நாயன்மார்கள் ஊர்வலமும், அன்று இரவு வெள்ளி ரத ஊர்வலமும் நடைபெறுகிறது. 7-ம் நாள் திருவிழாவான நவ.21-ம் தேதி மகாரதம் தேரோட்டம் நடைபெறுகிறது.
இவ்விழாவின் முக்கிய விழாவான தீபத் திருவிழா நவ.24-ம் தேதி தேதி அதிகாலை 4 மணிக்குக் கோயிலினுள் சுவாமி சன்னதியில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத் திருவிழா தொடங்கியதால் திருவண்ணாமலை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கொடியேற்றம் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, போளூர் தவெக சட்டப்பேரவை உறுப்பினர் அபிஷேக், தவெக மாவட்டச் செயலாளர் பாரதிதாசன், கோயில் தக்கார் மீனாட்சிசுந்தரம், கோயில் இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.