

ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில், திருப்பதி திருக்குடை ஊர்வலம், பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயில் அருகே நேற்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். படங்கள்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று தொடங்கியது. திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஏழுமலையானுக்கு திருக்குடைகள் உபயமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை பூக்கடை சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் 22-ம் ஆண்டு திருக்குடை ஊர்வல தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.
11 வெண்பட்டுக் குடைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, திருக்குடைகள் ஊர்வலத்தை கர்நாடக மாநிலம் தீர்த்தஹள்ளி ஸ்ரீ பீமனக்கட்டே மடத்தின் பீடாதிபதி ஸ்ரீரகுவரேந்திர தீர்த்த சுவாமிகள் கொடியசைத்து தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார்.
அவர் பேசும்போது, “200 ஆண்டாக நடந்து வரும் இந்த உற்சவம், நடுவில் சிறிது காலம் நின்றுவிட்டது. அதற்கு புது வடிவத்தை கோபால்ஜி கொடுத்துள்ளார்” என்றார். ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி பேசியபோது, “மதுரை அழகர்கோவில் கள்ளழகர் திருவிழாபோல, சென்னையில் திருக்குடை வீதிஉலா நடைபெறுகிறது.
600-க்கும் அதிகமான இடங்களில் திருக்குடைகளுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது” என்றார். இந்த நிகழ்வில், விஷ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்திரி, விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு பொருளாளர் சசிக்குமார், இணை பொதுச் செயலாளர் ராமசுப்பு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத மக்கள் தொடர்பு இணை பொறுப்பாளர் சுனில் தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்த ஸ்ரீரகுவரேந்திர தீர்த்த சுவாமிகள், ஹிந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர்.கோபால்ஜி.
பின்னர், என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்று திருக்குடைகள் கவுனி தாண்டின. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு, திருக்குடைகளுக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.
தொடர்ந்து, பல்வேறு பகுதிகளைக் கடந்து செல்லும் குடைகள் இன்று இரவு வில்லிவாக்கம் சவுமிய தாமோதரப் பெருமாள் கோயிலிலும், நாளை இரவு திருமுல்லை வாயில் வெங்கடேஸ்வரா பள்ளியிலும் தங்குகின்றன.
18-ம் தேதி திருமலை திருப்பதியில் தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில், ஏழுமலையானுக்கு திருக்குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட உள்ளன.