

திருப்பதி பிரம்மோற்சவத்துக்காக வில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை மேளதாளங்கள் முழங்க அனுப்பி வைக்கப்பட்டது. (உள்படம்) பிரம்மாண்ட மாலை சூடி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஆண்டாள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் சனிக்கிழமை நடைபெறும் கருட சேவையின்போது மலையப்ப சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் கலைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் திருப்பதிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த ஆண்டாள் மூலவர் பெரிய பெருமாளுக்கு தொடுத்த பூ மாலையை சூடிக்கொண்டார். மூலவர் வடபத்ரசயனர் (பெரியபெருமாள்) தினசரி பூஜையின்போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டாள் 108 திவ்ய தேச பெருமாள்களை மாலையாக சூடி இருப்பதாக ஐதீகம்.
மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவ விழாக்களில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்தே பெருமாள் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மூலவர் வெங்கடேச பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் நேற்று திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் நாளை (செப்.19) கருட சேவையின் போது ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்ட மாலை தயார் செய்யப்பட்டு, நேற்று ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின் ஆண்டாள் சூடிய பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.