திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: காலை அனுமன் வாகனம், மதியம் தங்கத் தேரோட்டம்

திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: காலை அனுமன் வாகனம், மதியம் தங்கத் தேரோட்டம்
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று காலை அனுமன் வாகனத்தில் கோதண்ட ராமர் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் தங்கத்தேர் ஊர்வலம், இரவு கஜ வாகன சேவையும் சிறப்பாக நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தான பிரம்மோற்சவ விழாவின் 6-ம் நாளான நேற்று காலை பக்த அனுமன் வாகனத்தில், கோதண்டராமர் அலங்காரத்தில் உற்சவ மூர்த்தியான மலையப்பர் எழுந்தருளினார். மாட வீதிகளில் அனுமன் வாகன சேவையை காண பக்தர்கள் திரண்டிருந்தனர். பலர் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த நடன கலைஞர்கள் மாட வீதிகளில் நடனமாடினர். இதில் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவத்தின் 6-ம் நாள் விழாவில் நேற்று மாலை 4 மணிக்கு தங்கத் தேர் புறப்பாடு நடந்தது. தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் எழுந்தருளினார். தங்கத் தேர் ஊர்வலத்தில் பெண்கள் அதிக அளவு பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்திக்கொண்டனர். நேற்றிரவு கஜ வாகனத்தில் உற்சவரான மலையப்பர் அருள் பாலித்தார். வாகன சேவையில் திரளான பக்தர்கள், நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.

திருப்பதி பிரம்மோற்சவம் 6-ம் நாள் விழா: காலை அனுமன் வாகனம், மதியம் தங்கத் தேரோட்டம்
தமிழகத்தில் உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஜனவரி வரை இருக்கும்: காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in