

திருப்பதி: திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில், கூடுதல் நிர்வாக அதிகாரி டாக்டர் ஏ.சரத் தலைமையில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
இதில் டாக்டர் சரத் பேசியதாவது: பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் டிச. 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 14-ம் தேதி பஞ்சமி தீர்த்தத்துடன் நிறை வடைகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 முதல் 15 சதவீத பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து வசதி, இலவச அன்னதானம், தரிசன வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஆண், பெண்களுக்கென தனித்தனி வரிசைகள், குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் அமைக்க வேண்டும். மாட வீதிகள் உட்பட திருப்பதி மற்றும் திருச்சானூர் முழுவதும் வண்ண விளக்குகள் அலங்காரம் செய்ய வேண்டும். கோயில் மற்றும் சுற்றுப்புறங்களில் அலங்கார வளைவுகள், மலர் அலங்காரங்கள் அமைத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.