

மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவில் சந்தனக்கூடு திருவிழா ஜனவரி 6-ம் தேதி நடக்கிறது. இவ்விழாவுக்கான கொடியேற்று நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதையொட்டி இரவு 7 மணிக்கு மலையடிவாரத்தில் பெரிய ரத வீதியில் பள்ளிவாசல் அருகிலுள்ள இரும்புக் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது.
அதன் பின்பு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் கொடி ஊர்வலம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. பள்ளிவாசலில் இருந்து பரம்பரை டிரஸ்டிகள் தலைமையிலானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். கோயில் வாசல், கீழரத வீதி, 16 கால் மண்டபம், மேலரத வீதி, வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் பள்ளிவாசலை அடைந்தது.
இதற்கிடையே ஊர்வலம் புறப்பட தொடங்கியபோது, தர்காவில் ஏற்றும் கொடி கம்பத்துடன் கூடிய கொடியை பள்ளிவாசல் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பழனியாண்டவர் கோயில் அடிவார மலைப் பாதை வழியாக சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவுக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்தனக்கூடு திருவிழாவுக்கான கொடி இரவு ஏற்றப்பட்டது. அதன் பின்பு அனைவரும் மலையிலிருந்து கீழே இறங்கினர்.
இந்த விழாவையொட்டி துணை காவல் ஆணையர்கள் அனிதா, இனிகோ திவ்யன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.