

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் டிச.5 தொடங்கி, 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
திருநாகேஸ்வரம் பிறையணியம்மன்-கிரிகுஜாம்பிகைய்யம்மன் உடனாய நாகநாத சுவாமி கோயிலில் நவக்கிரஹங்களில் ஒன்றாக ராகுபகவான் தனி சன்னதியில் தனது இரு மனைவிகளான நாகவல்லி-நாககன்னியுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டு, டிச.4-ம் தேதி முன்னை முதல்வன் வழிபாடு, திருமண் எடுத்தல், முளைப்பாரிகையிடுதல், திருக்காப்பு கட்டுதல் நடைபெற்றது.
பிரதான விழாவான இது, டிச.5-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்துக்கு 21 வகையான மங்களப்பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்தின் முன் பிறையணியம்மன் - கிரிகுஜாம்பிகைய்யம்மன் உடனாய நாகநாத சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
டிச.6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும், 13-ம் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருத்தேரோட்டம், மாலை ஆடவல்லான் புறப்பாடு நடைபெறுகிறது.
பிரதான நிகழ்ச்சியான கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாத் தீர்த்தவாரி 14-ம் தேதி காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் புறப்பாடும், தொடர்ந்து மதியம் 1.31 மணிக்கு மேல் சூரிய புஷ்கரணி திருக்குளத்தில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு கொடியிறங்குதல், 15-ம் தேதி இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் வீதியுலா, விடையாற்றி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளைத் துணை ஆணையர் தா.உமாதேவி, உதவி ஆணையர் கூடுதல் பொறுப்பு ரவிச்சந்திரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.