

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று தொடங்கி நவ.27-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று காலை கொடியேற்றத்தை முன்னிட்டு கம்பத்தடி மண்டபத்திலுள்ள தங்க கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உற்சவர் சன்னதியிலிருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
பின்பு வேதமந்திரங்கள் முழங்க காலை 10.35 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் தீப, தூப ஆராதனைகளுக்குப் பின் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் நா.சுரேஷ், மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.
உற்சவம் நடைபெறும் 10 நாட்களும் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் கோயிலுக்குள் ஆடி வீதியில் எழுந்தருள்கின்றனர்.
இதில் முக்கிய விழாவான திருக்கார்த்திகை நவ.24-ம் தேதி மாலையில் கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடைபெறும். அன்றிரவு 7 மணியளவில் மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழ மாசி வீதி சென்று அம்மன் தேரடி அருகிலும், சுவாமி சன்னதி தேரடி அருகில் பூக்கடை தெரு ஆகிய இரு இடங்களில் சொக்கப்பனை ஏற்றப்படும்.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.