கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

'ஓம் நமசிவாய' கோஷங்களுடன் பக்தர்கள் தரிசனம்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!
Updated on
2 min read

கோவில்பட்டி: கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “ஒம் நமசிவாய” என்ற கோஷங்களுடன் தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயிலில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஏப்.30-ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, திருக்கோயில் நிதி ரூ.6.40 லட்சத்தில் பளிங்கு கற்கள் அகற்றப்பட்டு, கருங்கற்களில் நீர் பாய்ச்சி சுத்தம் செய்தல், உபயதாரர் நிதி ரூ.25.50 லட்சத்தில் சுவாமி, அம்மன் சன்னதிகளில் தளம் அமைத்தல், உபயதாரர் நிதி ரூ.52 லட்சத்தில் ராஜகோபுரம் மற்றும் சன்னதி விமானங்களில் பஞ்சவர்ணம் பூசுதல் ஆகிய பணிகள் துரிதமாக நடைபெற்று முடிவடைந்துள்ளன.

பின்னர் மகா கும்பாபிஷேகத்துக்காக கோயிலின் வடதுபுறம், முன்புறம் என 2 யாகசாலை பந்தல்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 42 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, கடந்த 20-ம் தேதி காலை 7 மணிக்கு யாகசாலை பூஜைகளுக்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. கடந்த 22-ம் தேதி இரவு சுமார் 9 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து 23-ம் தேதி காலை 2-ம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3-ம் கால யாகசாலை பூஜை, 24-ம் தேதி காலை 4-ம் கால யாகசாலை பூஜை, இரவு 5-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

இன்று (25-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு கடங்கள் யாகசாலையில் இருந்து கோயிலுக்கு புறப்பட்டு, கோயில் வளாகத்தை சுற்றி வந்தது. பின்னர் 5.20 மணிக்கு ராஜகோபுரம், சாலை கோபுரம், விமானங்கள், அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன.

அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் நம சிவாய” என்று கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மூலவர் சுவாமி, அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கின்றன. மாலை 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றன. பூஜைகளை சிவஸ்ரீ ப.ரகு பரசுராமபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்தனர்.

விழாவில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, நகர்மன்ற தலைவர் கா.கருணாநிதி, அறங்காவலர் குழு தலைவர் பி.எஸ்.ஏ.ராஜகுரு, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரை மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!
“அழுத்தத்துக்கு அடங்கிப் போகும் ஆட்கள் நாம் இல்லை” - தவெக தலைவர் விஜய் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in