Published : 04 Feb 2020 07:16 PM
Last Updated : 04 Feb 2020 07:16 PM

சேமிக்கும் பழக்கத்தை பறைசாற்றும் நெற்களஞ்சியம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொங்கிப் பெருகி வந்த காவிரி ஆற்றில் தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லையில் ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டி தண்ணீரை எப்படி சிக்கனமாகவும், சீராகவும் பயன்படுத்தி விவசாயத்தை கையாள வேண்டும் என கற்றுக்கொடுத்த மன்னன் தான் கரிகாலச்சோழன்.

மாடு கட்டி போரடித்தால் மாளாது என்பதால், யானை கட்டி போரடித்த நாடு தான் சோழநாடு. சோழநாடு சோறுடைத்து என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டங்களில் முப்போகமும் நெல் சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். அதனால் தான் தஞ்சாவூர் நெற்களஞ்சியம் என போற்றப்படுகிறது. அந்த காலத்திலேயே கோயில்கள் மட்டுமல்லாமல், பஞ்சம் வரும் காலங்களில் பயன்படுத்துவதற்காக தானியங்களை, விதைகளை சேமித்து வைக்கும் களஞ்சியங்கள் நம் முன்னோர்களின் தொழில்நுட்ப அறிவை இன்றும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வீடுகளில் உட்கார திண்ணை இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஒவ்வொரு விவசாயியின் வீட்டிலும் தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்கள், பத்தாயங்கள் எனப்படும் தானிய சேமிப்பு கலன்கள் இருந்துள்ளது தெரிய வருகிறது.

இப்பகுதியில் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்க செல்லும் போது அந்த வீட்டில் தானிய குதிர்களும், பத்தாயங்களும், வைக்கோல் போர்களும் இருந்தாலே அந்த குடும்பம் எந்த அளவுக்கு வசதியானது, எதிர்கால திட்டமிடல் எப்படி உள்ளது என்பதை யூகித்து அதற்கு ஏற்றவாறு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது இன்றளவும் நிகழ்கிறது.

500 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்று ஒரு மிகப்பெரிய தானியக் களஞ்சியத்தை பாபநாசம் அருகே திருப்பாலத்துறையில் உள்ள பாலைவனநாதர் கோயிலில் அமைத்துள்ளனர். ஆசியாவிலேயே மிகப்பெரிய தானியக்களஞ்சியமாக கருதப்படும் இது 36 அடி உயரமும், 84 அடி சுற்றளவும் கொண்டது. இதன் அடிப்பகுதி வட்ட வடிவிலும், மேல்பகுதி கூம்பு வடிவிலும் கதவுகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 90 ஆயிரம் கிலோ தானியத்தை சேமித்து வைக்க முடியும். இந்த தானியக்களஞ்சியம் எவ்வித சேதமும் இன்றி, தமிழர்களின் சேமிப்புத்திறனுக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்குகிறது.

தஞ்சாவூரின் வடபகுதியான திருவையாறு பகுதியில் ஐந்து முக்கிய ஆறுகளான காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு ஆகிய ஆறுகள் பாய்ந்து வளப்படுத்தியதால், ஆண்டுமுழுவதும் விவசாயம் தழைத்தோங்கியுள்ளது. தஞ்சாவூர் பகுதியில் விளையும் நெல்லானது, தற்போதும் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு உணவுத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கிறது என்றால், அதற்கு தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளின் உழைப்பும், அதற்குத் திட்டமிட்ட மன்னர்களின் நீர் மேலாண்மையும் தான் காரணம் என்றால் அது மிகையாகாது.-

- வி.சுந்தர்ராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x