Published : 04 Feb 2020 07:11 PM
Last Updated : 04 Feb 2020 07:11 PM

தஞ்சையின் கல்லணையும்... வெண்ணாற்றுத் தடுப்பணையும்!

கச்சமங்கலத்தில் உள்ள தடுப்பணை

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்காக அமைந்த ஒரு நீர்த்தேக்கக் கட்டட அமைப்பைத்தான் கல்லணை எனச் சிறப்பாகக் குறிப்பிடுவர். கல் என்ற சொல் பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பெற்ற ஒரு துண்டுப் பகுதியைக் குறிப்பிடுவதாகும். பாறையிலிருந்து வெட்டி எடுக்கப் பெறும் கல்லைக் கருங்கல் என்றே அழைப்பர். அத்தகைய கருங்கல் கொண்டு அமைக்கப் பெற்றதே காவிரி நதியில் திகழும் கல்லணையாகும்.

கல்லணை என்ற சொல் வழக்குகூட பிற்காலத்தில் உருவான ஒன்றே. ஆறுகளில் மிகுதியாக வருகின்ற நீரைத் தேக்குவதற்காக அமைக்கப்பெறும் கருங்கல்லால் ஆன கட்டட அமைப்பை ‘கற்சிறை’ என்ற சொல்லால் மட்டுமே சங்ககாலத் தமிழ் மக்கள் குறிப்பிட்டனர். இதற்குச் சான்றாக மதுரைக்காஞ்சி என்ற பத்துப்பாட்டு நூலில் உள்ள ‘வருபுனல் கற்சிறை கடுப்ப’ என்ற பாடலடியையும், ‘வருவிசைப் புனலைக் கற்சிறைபோல’ என்ற தொல்காப்பியத்துச் சூத்திரம் (புறத்திணை இயல் 8) ஒன்றாலும் நாம் அறிந்து கொள்ளலாம்.

இக்குறிப்புகளைக் கொண்டு நோக்கும்போது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆற்றின் குறுக்கே நீரைத் தேக்கி தேவையான நீரை மட்டுமே விளைநிலங்களுக்குப் பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பம் தமிழகத்தில் சிறந்திருந்தது என்பது உறுதி பெறுகின்றது.

காவிரி என்ற பேராறு கர்நாடக மாநிலத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குடகு நாட்டில் தோற்றம் பெறுகின்றது. அங்குள்ள பல சிறு வாய்க்கால்களும், சிற்றாறுகளும் இணைந்து காவிரி நதியாக ஓடத் தொடங்குகிறது. அந்நதியுடன் ஏமாவதி, கபினி, லட்சுமண தீர்த்தம், சிம்சா, அரகோவதி போன்ற பல துணை நதிகள் இணைந்து காவிரி ஆறாகப் பெருக்கெடுத்துப் பாய்கிறது. கர்நாடக தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு எனும் இடத்தில்தான் கடுமையான வேகமும் சீற்றமும் உடைய பேராறாக காவிரி உருவெடுத்து ஒகேனக்கல் வழியாகத் தமிழகத்துக்குள் நுழைகிறது. அந்நதியில் தமிழகத்தில் கட்டப்பெற்றுள்ள முதல் அணை மேட்டூர் நீர்த்தேக்கமாகும். இது, நூறாண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பெற்றதாகும். அங்கிருந்து புறப்படும் காவிரி நதியுடன் பவானி, நொய்யல், அமராவதி ஆகிய மூன்று பெரும் நதிகள் இணைந்து அகண்ட காவிரியாக மாறி சோழநாட்டுக்குள் ஓடத் தொடங்குகிறது.

சோழநாட்டில் ஓடும் காவிரியின் சிறப்புப் பெயர் பொன்னி நதி என்பதாகும். அதனால்தான் தமிழ் இலக்கியங்கள் சோழநாட்டை பொன்னி நாடு என்றும், சோழ மன்னனைப் பொன்னி நாடன் என்றும் குறிப்பிடுகின்றன. அகண்ட காவிரியாக ஓடி வரும் பொன்னி நதி முதன்முதலாக சோழநாட்டில்தான் இரு பெரும் நதிகளாகப் பிரிகிறது. திருச்சிராப்பள்ளி நகரத்துக்கு மேற்காக முக்கொம்பு எனும் இடத்தில் தென்புறம் காவிரியாகவும், வடபுறம் கொள்ளிடப் பேராறாகவும் இந்நதி இயற்கையாகவே பிரிந்து ஓடுகிறது. இந்த இடத்திலிருந்து காவிரி தாழ்வாக உள்ள நிலப் பரப்பிலும், கொள்ளிடம் சற்று மேட்டு நிலப் பரப்பிலும் பாய்கின்றன. பெருவெள்ளக் காலங்களில் வரும் மிகைநீர் அனைத்தும் காவிரி பாயும் நிலப்பரப்பில் பாய்ந்து பேரழிவுகளை ஏற்படுத்தாத வகையில் அந்த மிகைநீர் இயற்கையாகவே கொள்ளிடத்தில் வடிந்து கடலில் கலந்துவிடும்.

காவிரியும் கொள்ளிடமும் இருநதிகளாகப் பிரியும் இடத்துக்கு முன்பாக அகண்ட காவிரியின் தென்கரையில் முசிறி என்ற ஒரு பேரூர் திகழ்கிறது. முன்னாளில் இவ்வூர் முசுறி என்றும் மும்முடிச் சோழப்பேட்டை என்றும் அழைக்கப் பெற்றது. இவ்வூரில் சோழ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் காவிரியிலிருந்து ஒரு கால்வாய் வெட்டப்பெற்று அதன் வழி விளைநிலங்களுக்கு நீரைக் கொண்டு சென்றுள்ளனர். அந்தக் கால்வாயின் தலைப்பகுதியில் (வாய்த்தலை) கருங்கல்லாலான ஒரு மதகை அந்நாளிலேயே அமைத்துள்ளனர். இது சிறிய அமைப்பில் உள்ள கற்சிறை அல்லது கல்லணையாகும். இந்த அமைப்பை மூன்றாம் இராசராச சோழன் காலத்தில் அவன் ஆட்சிக்கு உட்பட்ட குறுநில மன்னன் வாணகோவரையனின் படைத்தலைவன் வெட்டுவார்நாயன் என்பவன் கி.பி. 1220-ல் அமைத்தான் என்பதை அந்த மதகில் உள்ள சோழ மன்னனின் கல்வெட்டு கூறுகின்றது. அதில் அகண்ட காவிரியாற்றின் பெயர் ‘கரிகாலச்சோழப் பேராறு’ எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இது ஒரு அரிய செய்தியாகும். இன்றும் இக்கல்மதகு சிறப்பாக இயங்கி விளைநிலங்களுக்குப் பாசனம் அளிக்கிறது.

திருவரங்கம், திருஆனைக்கா ஆகிய இரு பேரூர்களை நடுவில்கொண்டு காவிரி தென்புறமும், கொள்ளிடம் வடபுறமும் ஓடுகின்றன. திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர் மாவட்டப் பகுதியில் கல்லணை என்ற மிகப் பழமையான அணை அமைந்துள்ளது. சோழர்கால கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சங்க கால சோழமன்னன் கரிகாலன் காவிரியின் இரு கரைகளையும் மிக வலுவுடையதாகச் செய்தான் என்றும், அதனால் காவிரியின் கரை ‘கரிகாற் சோழக்கரை’ என்ற பெயரால் அழைக்கப்பெற்றது என்றும் குறிப்பிடுகின்றன.

தற்போது, ஆங்கிலேயர் கால மேற்கட்டுமானமாகத் திகழும் கல்லணையைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட கேப்டன் கால்ட்வெல், மேஜர்சிம், சர் ஆர்தர் காட்டன் போன்ற வல்லுநர்கள் காவிரி ஆற்றின் தரைமட்டத்துக்குக் கீழாக மிக வலுவான கருங்கல் கொண்டு அமைக்கப்பெற்ற அடித்தள அமைப்பின் கட்டுமான நுட்பத்திறன் கண்டு வியந்து குறிப்பிட்டுள்ளனர். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பெற்ற கட்டட அமைப்பு என்பதையும் உறுதி செய்துள்ளனர். அந்த அணை காவிரியின் குறுக்காக மட்டும் அமைக்கப்பெறாமல், காவிரியின் வடகரையிலும் மதகு அமைப்புகளுடன் திகழ்ந்ததாகும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன்பு பதினேழாம் நூற்றாண்டு வரை பண்டைய கல்லணை திகழ்ந்தது என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன.

16, 17-ம் நூற்றாண்டுகளில் தஞ்சைப் பகுதி தஞ்சை நாயக்க அரசர்களால் ஆளப்பெற்று வந்தது. அந்த அரச மரபில் வந்த அச்சுதப்ப நாயக்கர் என்பவர் திருவையாற்றில் பொறித்துள்ள ஒரு கல்வெட்டில் அவர் காவிரியின் கல்லணையை மீண்டும் வலுவுடையதாகச் செய்தார் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. அடுத்து அவர் மகன் இரகுநாத நாயக்கர் காலத்தில் தற்போதைய கல்லணையின் தென்கரையில் உள்ள தோகூர் எனும் இடத்தில் ஒரு பெரும்போர் நிகழ்ந்ததாகவும் அப்போது சக்கராயன் என்ற விஜயநகர தளபதி ஒருவன் தலைமையில் வந்த படை சோழநாட்டுக்கு கெடுதல் செய்திட கல்லணையை இடித்ததாக நாயக்கர் கால ஏட்டுச் சுவடி நூல்கள் கூறுகின்றன. அக்காலகட்டத்தில்தான் பண்டைய கல்லணை பேரழிவை அடைந்துள்ளது.

கல்லணை என்ற இவ்வமைப்பு காவிரியின் தென்கரையில் உள்ள தோகூரிலிருந்து வடகரையில் உள்ள கோவிலடி வரை (திருப்பேர்நகர் என்பது இவ்வூரின் பழம்பெயர்) ஆற்றின் குறுக்கே அமைந்ததாகும். இங்கு காவிரி நதி காவிரியாகவும், வெண்ணாறு என்ற கிளை ஆறாகவும் இரண்டாகப் பிரிகிறது. இந்த இரு ஆற்றுநீரின் போக்கைக் கட்டுப்படுத்த அமைக்கப்பெற்றதே குறுக்காக அமைந்த கல்லணைப் பகுதியாகும். இங்கு காவிரியின் வடகரையில் மேற்கு நோக்கிய வகையில் மதகு அமைப்புகளுடன் கல்லணையின் ஒரு கட்டடப் பகுதி அமைந்துள்ளது. முக்கொம்பு பகுதியில் இருக்கும் நிலமட்டப் பகுதிகளுக்கு மாறுபட்ட வகையில் இது அமைந்துள்ளது. கல்லணையின் வடகரை மதகிலிருந்து பிரியும் உள்ளாறு அருகில் ஓடும் கொள்ளிடத்துடன் இணைந்து விடுகிறது. பெருவெள்ளக் காலங்களில் வரும் மிகைநீர் காவிரி, வெண்ணாறு ஆகிய நதிகளில் ஓடி மேலும் அழிவுகள் ஏற்படாதவகையில் வடகரை உள்ளாறு வழியே கொள்ளிடத்தை அடைந்துவிடும்.

எனவே, சோழநாட்டையும் அதன் வயல் வளங்களையும் காப்பாற்றும் வண்ணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பெற்றதே கல்லணை ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த அணையிலிருந்து கல்லணைக் கால்வாய் என்ற மேலும் ஒரு கால்வாயையும் அமைத்துள்ளனர்.

கல்லணையிலிருந்து பிரியும் வெண்ணாறு முற்காலத்தில் விண்ணாறு என்ற பெயரில் அழைக்கப்பெற்றது என்பதைக் கல்வெட்டுகளும் இலக்கியக் குறிப்புகளும் உணர்த்துகின்றன. அந்த ஆறு கல்லணையிலிருந்து பிரியும் இடத்திலிருந்து சுமார் 8 கி.மீ. வரை தரை மட்டத்துடன் இணைந்தே ஓடுகிறது. கச்சமங்கலம் எனும் இடத்திலிருந்து சுமார் 20 கி.மீ. வரை ஊர்கள் இருக்கும் தரைமட்டத்திலிருந்து விண்ணாறு தாழ்ந்து மிக ஆழத்திலேயே செல்வதால் இருகரையில் இருக்கும் எந்த ஊருக்கும் ஆற்றிலிருந்து நேராக நீர்ப்பாசனம் செய்ய இயலாது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த தமிழர்கள் கச்சமங்கலம் அருகே இருந்த நேரிமலை என்ற மலையிலிருந்து கற்பாறைகளை வெட்டி எடுத்து ஆற்றின் குறுக்காக ஒரு கற்சிறை எனப்படும் தடுப்பணையைக் கட்டியிருக்கிறார்கள். அந்த தடுப்பணையால் ஆற்றின் நீர்மட்டம் உயர்த்தப் பெற்றுள்ளது. உயரமான இரு கரைகளிலும் அமைக்கப்பெற்ற கல் மதகுகள் மற்றும் இரு கரைகளிலும் தோண்டப் பெற்ற இரண்டு வாய்க்கால்கள் வழி பாயும் ஆற்றுநீர் அந்தப் பகுதியில் உள்ள ஊர்கள் முழுவதற்கும் பாய்ந்து வளப்படுத்தியது.

மேலும் இரு கரை கால்வாய்களின் கடைப்பகுதியில் இரண்டு ஏரிகளையும் அமைத்து நீரை சேமித்துள்ளனர். இப்பணிகள் சேந்தன், அவன் தந்தை அழிசி ஆகிய அப்பகுதியின் குறுநிலத் தலைவர்கள் மூலமாக நிகழ்ந்துள்ளன. கரிகாலன் கல்லணையைக் கட்டிய காலத்திலேயே இந்த மகத்தான பணியும் நிறைவு பெற்றுள்ளது. அதனால்தான் நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்கத் தமிழ் நூல்களில் இந்நிலப்பகுதிகள் காவிரி நீர் பாயும் வளமான வயல்களையுடைய ஆர்க்காடு எனும் நாட்டுப் பகுதிகளாகக் குறிக்கப் பெற்றுள்ளன.

முசிறியில் உள்ள சோழர்கால கல்மதகும், தோகூரின் கல்லணையும், கச்சமங்கலத்துத் தடுப்பணையும் தமிழ் மக்களின் இரண்டாயிரம் ஆண்டுகால நீர் மேலாண்மை அறிவியல் திறத்தின் சான்றுகளாக இன்றும் விளங்குகின்றன.

- முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x