Published : 04 Feb 2020 06:34 PM
Last Updated : 04 Feb 2020 06:34 PM

துளிதுளியாய்...: கோயிலின் வடிவமைப்பு

ஒவ்வொரு சதுரமும் 60 மீட்டர் (59.40 மீட்டர்) அளவுள்ள பக்கங்களைக் கொண்டது. இதுவே கோயில் வளாகத்தின் அகலம். இரு சதுரங்கள் இணைந்து 120 மீட்டர் நீளத்தை அளிக்கின்றன. இதுவே வளாகத்தின் நீளம் ஆகிறது. அவ்வளவுகள் நிகழ்த்தும் அற்புதங்கள் வியப்பின் அடித்தளங்கள். மூன்றாவதான சதுரம் எல்லை வரையறை செய்ய கற்பனையாகத் திரட்சி கொண்டது. ஆக மூன்று சதுரங்கள் இக்கோயில் வடிவமைப்பைத் தீர்மானிக்கின்றன.

கட்டுமானத்தில் பஞ்சாட்சரம்

உப பீடத்தின் மீது இருத்தப்பட்ட இரு எதிர் சம பக்கங்களைக் கொண்ட முக்கோணத்தின் உச்சி கோபுரத்தின் உயரத்தைத் தீர்மானிக்கும் பிரமிடு என்னும் எண்ணத்துக்கு உங்கள் சிந்தனை தாவினால் நீங்கள் முன்னோடி தான்.

இந்த முக்கோணம் அடிப்படையான சதுரத்தின் ஒரு பக்கத்தின் மீது அமர்ந்த அரைவட்டத்துக்குள் அடங்கும். இந்த அரை வட்டத்தின் விட்டம் அடிப்படையான சதுரத்தின் பக்கம். பாரதி கூற்றுப்படி கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என்பவர்களுக்கு கொஞ்சம் தலை சுற்றலாம். ஆனால், இது ஒரு சோறுதான், பானை சோறு இன்னும் இருக்கிறது. அதற்கு ஒரு கட்டுரை போதாது.
அடிப்படையான சதுரங்களின் மூலைவிட்டங்கள் சந்திக்கும் புள்ளிகள் கோயிலின் ஒழுங்கமைப்பைத் தீர்மானிக்கின்றன. மூன்று சதுரங்களின் மூலை விட்ட வெட்டுப் புள்ளிகளையும் இணைத்தால் உருவாகும் நேர்க்கோட்டில் பெருவுடையார் திருக்கோயில், நீட்சி கொண்டுள்ளது.

முதல் வெட்டுப்புள்ளி கேரளாந்தகன், இரண்டாவதில் நந்தி, மூன்றாவதில் பெருவுடையார். முதல் புள்ளியை பிரம்மாவாகவும், இரண்டாவதைத் திருமாலாகவும், மூன்றாவதைச் சிவனாகவும் உருவகப்படுத்தலாம். லிங்க வடிவத்தில் பிரம்ம பாகம் பூமியில் புதையுண்டு கண்களுக்குத் தெரிவதில்லை. அதனால், அதை கற்பனையான சதுரமாக வடிமைத்துள்ளனரோ எனும் ஐயம் எழுகிறது.

இதுதான் லிங்க உருவத்தின் பாகங்கள் கூட நேர்க்கோட்டில் இணையும் புள்ளிகள் கேரளாந்தகன் நுழைவாயில் தொடங்கி உண்ணாழி (கர்ப்பகிரகம்) வரை 5 நிலைகள் ஆகும். இதை பஞ்சாட்சரம் ஆக (நமசிவாய) உருவகப்படுத்தலாம். இப்படியெல்லாம் சிந்தித்திருப்பார்களா என எண்ணம் தோன்றுவது இயல்பு. ஆனால், கிடைக்கும் ஆதாரங்கள் அப்படித்தான் எனும் பதிலைத் தருகின்றன.

100 மீட்டர் விட்டத்தில் உடைக்கப்பட்ட மலை

கருவறை தரைத்தளம் 30.18 மீட்டர் பக்கமாக கொண்ட சதுரத் தளத்தில் எழுப்பப்பட்டு உள்ளது. இத்தலம் தரையிலிருந்து 2 மீட்டர் உயர்த்தப்பட்டுள்ளது. விமானம் வளாக அகலமான (59.82 மீ) 60 மீட்டரை உயரமாகக் கொண்டது. இவ்வளவு பெரிய கோயிலை கற்றளியாக உருவாக்க எவ்வளவு கற்கள் தேவைப்பட்டிருக்கும் என்று மனத்தில் எண்ணிப் பார்ப்பதே வியப்பாக உள்ளது.
கருவறையோடான விமானம் மட்டுமே 16,500 கன மீட்டர் கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது 41,250 டன் கற்களைக் கொண்டுள்ளது. இந்த அளவு கற்கட்டுமானத்துக்கு கிட்டத்தட்ட 70,000 டன் செதுக்கப்பட்ட பாறை தேவைப்பட்டிருக்கும். நினைக்கவே அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கொண்ட கட்டுமானம் இத்திருக்கற்றளி.

ஒட்டுமொத்தமாக தற்போது உள்ள கட்டுமானத்தைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 49,000 கன மீட்டர் கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றின் எடை 1,22,500 டன். இதற்கு 1,85,000 டன் கற்பாறை தேவைப்பட்டிருக்கலாம்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் இக்கோயிலின் உயரத்தில் 100 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு மலை உடைக்கப்பட்டு இருக்க வேண்டும். மலைக்க வைக்கும் இந்தப் பெருமுயற்சி ஆறு ஆண்டுகளில் நிறைவேறி உள்ளது.

6 ஆண்டுகளில் நிகழ்ந்த அற்புதம்

ராஜராஜனின் 19-ம் ஆட்சி ஆண்டாகிய கிபி 1004-ல் தொடங்கி 25-ம் ஆட்சி ஆண்டாகிய 1010-ல் முடிந்தது என தகவல்களில் கூறப்படுகிறது.

அதாவது, தனது 25-வது ஆட்சி ஆண்டில் 275-ம் நாளில் தான் ஸ்ரீ ராஜராஜேஸ்வரமுடையார் விமானக் கலசத்துக்காக 3,083 பலம் செப்புக்குடமும் அதன் மேல் பூச 2,926 கழஞ்சு பொன்னும் அளித்தச் செய்தியைக் கூறும் கல்வெட்டு கருவறையின் வடபுறத்தில் பானத்துப் பட்டிறையில் உள்ளது. சண்டிகேசர் எதிராக தொடங்கும் நீண்ட கல்வெட்டு கூறும் பல செய்திகளில் இதுவும் ஒன்று. இதன் மூலமே இக்கோயில் 1010-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

பெரும் உயரத்துக்கான சவால்

கோயிலின் புறச் சுவர் 3.90 மீட்டர் கனமும், உட்புறச் சுவர் 3.35 மீட்டர் கனமும் கொண்டுள்ளன. இவ்விரு சுவர்களுக்கு இடையே 2 மீட்டர் அகல சாந்தாரம் உள்ளது. 2 சுவர்களின் உள் வரி, வெளி வரிக் கற்கள் இடையில் மூண்டு கற்கள் சுண்ணாம்புக் காரையுடன் நிரப்பப்பட்டுள்ளது.

உள் வரி, வெளி வரி கற்கள் கிடைக்கும் வடிவத்துக்கேற்ப செதுக்கி படிய வைக்கப்பட்டு கட்டப்பட்டதில் இணைப்பதற்கு எவ்வித காரையும் பயன்படுத்தவில்லை.
அறிவியல் வளர்ச்சி அளித்த பெரும் இயந்திரக் கருவிகள் ஏதும் இல்லாத காலத்தில் இவ்வளவு உயரத்துக்கு பெரும் கற்களை எப்படி உயரக் கொண்டுசென்று கட்டினார்கள் என்பதற்கும் பல கதைகள் கூறப்படுகின்றன.

வடிவமைப்புச் செயல்திட்ட சாத்தியங்கள் அடிப்படையில் இக்கோயிலுக்கு எகிப்திய பிரமிடு கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட சுற்றுவட்ட சாய்தள மேலேற்றுப் பாதை வடிவமைப்பு தான் கையாளப்பட்டிருக்க வேண்டும். சாரப்பள்ளம் எனும் இடத்திலிருந்து இதற்கான மண் தோண்டப்பட்டிருக்கலாம்.

வெளியில் சுற்றுவட்ட சாய் தளமும் உட்பகுதியில் மண் நிரப்பியும் ஒவ்வொரு நிலையாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். வெளிப்புற மண் அகற்றப்பட்ட பிறகு உள் நிரப்பப்பட்ட மண்ணை மகா துவாரம் வழியாக எலி வளை தோண்டுவது போல தோண்டி வெளியேற்றி இருக்கக்கூடும்.

மூலவர் நிர்மாணம்

பலரின் கேள்வி... மூலவராகிய பெருவுடையாரை நிலை நிறுத்திவிட்டு கோயில் கட்டப்பட்டதா? அல்லது திருக்கற்றளி பணி முடிந்து மூலவர் நிர்மாணிக்கப்பட்டாரா? என்பதுதான்.
கருவறை 7.90 மீட்டர் அளவை பக்கங்கள் கொண்ட சதுரம், இதில் 3.90 மீட்டர் (13 அடி) உயரமும் 16.70 மீட்டர் (55 அடி) சுற்றளவும், 1.80 மீட்டர் (6 அடி) கோமுகம் கொண்ட லிங்கத்தை உள்ளே எடுத்துச் செல்வது எளிதானது மட்டுமல்ல, இயலாததும் ஆகும். இதன் எடை கிட்டத்தட்ட மொத்தமாக 25 டன் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. மூலவரான பெருவுடையாரை நிர்மாணித்துவிட்டு, அதன் பிறகே திருக்கற்றளி பணிகள் தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.

வியத்தகு தொழில்நுட்பம்

பெருவுடையார் திருக்கற்றளியின் மொத்த எடையும் 3.90 மீட்டர் (13 அடி), வெளிப்புறச் சுவர் 3 மீட்டர் (11அடி) உட்சுவர்களின் மூலம் பூமிக்கு கடத்தப்படுகிறது. இதன்படி சுவரின் மூலம் கிட்டத்தட்ட ஒரு சதுர மீட்டருக்கு 92 டன் எடை பூமி மீது இறக்கப்படுகிறது. இதைத் தாங்கும் அளவுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறச் சுவர்கள் மூலம் கிட்டத்தட்ட 28,796 டன் எடையும், உட்புறச் சுவர்கள் மூலம் கிட்டத்தட்ட 12,144 டன் எடையும் ஆகக் கூடுதலாக கிட்டத்தட்ட 40,940 டன் எடை பூமியின் கிடை மட்டத்தை சுவர்கள் மூலம் எட்டுகிறது. இந்த சவாலான பணியை எவ்வளவு நுட்பமாகக் கையாண்டு இருக்கிறார்கள் என்பது தொழில்நுட்பவாதிகளுக்கே பெரு வியப்பாக இருக்கிறது.
திருக்கற்றளி வளாகத்தின் அளவுகள் தீர்மானத்தின் அடிப்படையில் ராஜராஜன் திருவாயில் உயரமும் கேரளாந்தகன் திருவாயில் உயரமும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ராஜராஜன் திருவாயில் திருக்கற்றளி, விமானத்தின் உயரத்தில் ஐந்தில் இரண்டு பங்காக உள்ளது. அதன்படி 23.94 மீட்டர் உயரம் அளவிடப்படுகிறது.

துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்ட கல்வெட்டுகள்

தஞ்சாவூர் பெரிய கோயில் போன்று வேறு எந்தக் கோயிலிலும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்படவில்லை.திருக்கற்றளி வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள் மொத்தம் 107, இதில் ராஜராஜ சோழன் காலத்திய கல்வெட்டுகள் 64, ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை 18, பல துண்டுக் கல்வெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அரச குலத்தவர், சேனாதிபதிகள், பெரும் தனத்து அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அளித்த கொடைகள் பற்றியும், கோயில் நிர்வாகம், நிர்வாகிகள், ஆடல் நிகழ்வுகள், நிகழ்த்து கலைஞர்கள் போன்ற செய்திகளையும் கல்வெட்டுகள் வழங்குகின்றன. ராஜராஜன், ராஜேந்திரன் மெய்க்கீர்த்தி கூறும் கல்வெட்டு மூலம் வெற்றி கொண்ட நாடுகள் காலக்கிரமப்படி அறிய வருகின்றன. இக்கல்வெட்டுப் பதிப்பு, இந்திய தொல்லியல் துறையால் 1888-ம் ஆண்டில் தொடங்கி 1992-ம் ஆண்டு வரை படி எடுக்கப்பட்டது.

திருக்கற்றளி உள்அமைப்பு

திருக்கற்றளியின் உள்கூடு வெற்றிடமாக பிரம்புக் கூடையை கவிழ்த்து வைத்தாற்போல அமையப் பெற்றிருக்கிறது. மிகவும் நுட்பமான முறையில் விமான கற்களின் பளு சீராக பரவலாக்கப்பட்டு அவை உள்வாங்கிக் கொள்ளா வண்ணம் பளு சமன் செய்யும் கோட்பாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது வியப்பின் விளிம்புக்கு நம்மை தள்ளிச் செல்கிறது. கீழ்த்தளம் 30.18 மீட்டர் பக்க சதுரத்தில் தொடங்கிய விமானம் 8.70 மீட்டர் பக்கமுள்ள கிரீவம் தாங்கும் சதுரத்தை உருவாக்குகிறது. 3.60 மீட்டர் (12 அடி) கலசத்தைத் தாங்குகிறது.

இயற்கை தந்த அடித்தளம்

இன்றளவும் எவ்வித பாதிப்புமின்றி ராஜராஜேச்சுவரம் கோயில் விமானம் நிற்பதற்கு அன்று அதை வடிவமைத்தவரின் நுண்ணறிவைச் சான்று காட்டலாம்.

30.18 மீட்டர் அளவு சதுரத்தின் மீது ஏற்றப்பட்ட கற்களின் எடையைக் கொண்டு நிலத்தின் மீது கீழ் நோக்கி அழுத்தப்படும் எடை ஒரு சதுர மீட்டருக்கு கிட்டத்தட்ட 45 டன்னாகும். இவ்வளவு எடையைத் தாங்கும் அளவுக்கு அடித்தளம் உள்ளது என்பதே வியப்புக்குரிய செய்தி. இக்கோயில் அமையப் பெற்ற மண்ணானது இறுகிய செம்மண் படிமங்களால் ஆனது. அதுதான் அதன் தாங்குதிறன். இக்கோயில் கீழ் அழுத்து விசையை எதிர்கொள்ளும் விதமாக அமையப் பெற்றது. இது இயற்கை அளித்த கொடை. இதனால் சோழர்கள் மரபாக வடகிழக்குப் பகுதியில் கோயிலை அமைத்துக் கொள்ளும் பண்பானது குந்தகம் இல்லாமல் நிறைவேறியது.

தஞ்சையும் காஞ்சியும்

இவ்வளவு பிரமிப்பூட்டும் பிரம்மாண்டத்தை உருவாக்கும் வகையிலான அந்த நுட்ப மூலம் ராஜராஜனுக்கு எங்கிருந்து எட்டியது என்னும் வினாவுக்கு அவரே காஞ்சி கைலாசநாதர் கோயில் கல்வெட்டு மூலமாக பதில் அளிக்கிறார்:

‘காஞ்சிப் பேட்டுப் பெரிய தளி’ என்று தஞ்சை பெருவுடையார் கோயில் வடிவமைப்பு காஞ்சி கைலாசநாதர் கோயிலோடு மட்டுமே ஒப்பிடக் கூடியது. வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன், குருவாகிய மதுராந்தகனான நித்த விநோத பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் ஆகியோரின் பெயர்கள் ஆயிரம் ஆண்டைக் கடந்தும் நிற்பதற்கு இப்பிரமிப்பின் பிரம்மாண்டமே சாட்சி.

பரிவார ஆலயங்கள்

கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் என நுழைவு வாயிலின் வழியே எட்டப்படும் வளாகத்துக்குள் எழும் வானுயர்ந்த 13 நிலை அமைப்புடைய விமானம் கொண்ட கோயில் முக மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பக்கிரகம் என்ற ஒழுங்கைக் கொண்டது.

இவ்வமைப்பு ஏற்பட்ட காலத்தில் இவ்வளாகத்தினுள் பெருவுடையார் கோயிலோடு சண்டிகேஸ்வரர் கோயில் மட்டுமே இருந்தது. தற்போது உள்ள பிற கோயில்கள் பிற்காலத்தவையே. கோயிலைச் சுற்றிலும் ராஜராஜனின் தலைமை தளபதியான கிருஷ்ணன் ராமன் என்னும் மும்முடிச் சோழ பிரம்மராயர் எடுப்பித்த திருச்சுற்று மாளிகை இரண்டு அடுக்குகளாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது கீழடுக்கு மட்டும் உள்ளது. இதில்தான் 36 பரிவார ஆலயங்கள் உள்ளன.

தொகுப்பு: இரா.கோமகன், வரலாற்றாளர்,
தலைவர், கங்கைகொண்ட மேம்பாட்டுக் குழுமம்.
வரைபடங்கள்: இந்திராகாந்தி தேசிய கலை அறிவியல் மையம், புதுடெல்லி.
பிரெஞ்சு - இந்திய கலாச்சார மையம், புதுச்சேரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x