

கும்பகோணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வைணவ திவ்யதேச கோயில்களுக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை இயக்கம் இன்று (அக்.3) அதிகாலை தொடங்கப்பட்டன.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு அன்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு வைணவ திவ்ய தேச கோயில்களில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டு, இரவு 8 மணிக்கு கும்பகோணம் வந்து சேரும். பயணக் கட்டணம் ஒருவருக்கு ரூ.1,350. இந்த சிறப்புப் பேருந்தில் பயணிக்கும் பக்தர்கள், சீர்காழி தாடாளன் பெருமாள் கோயில், அண்ணன் கோவில் அண்ணன் பெருமாள் கோயில், திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயில், திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள் கோயில், திருநாங்கூர் வைகுந்தநாதர் கோயில், வான்புருஷோத்தமன் பெருமாள் கோயில், செம் பொன்செய் பெருமாள் கோயில், பள்ளிகொண்ட பெருமாள் கோயில், குடமேடு கூத்தர் கோயில், நாராயண பெருமாள் கோயில், திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில், சேங்கனூர் ஸ்ரீநிவாசா பெருமாள் கோயில், நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாசா பெருமாள் கோயில், கும்ப கோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் ஆகிய 14 கோயில்களில் சென்று சிறப்பு தரிசனம் மேற்கொள்ள உள்ள ஒரு நாள் ஆன்மீக சுற்றுலா சிறப்பு பேருந்து சேவை இயக்க தொடக்க விழா கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் தட்சிணாமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கூட்டாண்மை பொது மேலாளர் சிங்காரவேலு, கும்பகோணம் பொது மேலாளர் நடராஜன், கூட்டாண்மை வணிக மேலாளர் ராஜமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அந்தப் பேருந்துக்கு மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து 52 பேர் பயணம் செய்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.