குமுளி அருகே சபரிமலை பாத யாத்திரை பக்தர்களுக்காக காட்டுப் பாதையில் சிறப்பு வழிபாடு

குமுளி அருகே சபரிமலை பாத யாத்திரை பக்தர்களுக்காக காட்டுப் பாதையில் சிறப்பு வழிபாடு
Updated on: 
2 min read

குமுளி: சபரிமலையில் மண்டல வழிபாட்டுக்காக வனப்பாதைகள் திறக்கப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக பழங்குடி மக்களான மலைஅரையர் சார்பில் காட்டுப்பகுதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சபரிமலைக்கு எரிமேலி - பம்பை வழியே வாகனப் பாதை உள்ளது. இருப்பினும் பாரம்பரிய பக்தர்கள் பலரும் காளகட்டி, அழுதாகடவு வனப்பாதை வழியே 45 கி.மீ நடந்து சென்று பம்பையில் நீராடி பின்பு மலைக்குச் செல்வர். மகிஷி எனும் அரக்கியை வதம் செய்யச் சென்ற தொன்மையான பாதை என்பதால் பலரும் இதில் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

ஆண்டு முழுவதும் தடை செய்யப்பட்ட இந்த காட்டுப் பாதை மண்டல, மகர வழிபாடு காலங்களில் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர். வரும் நவ.17-ல் மண்டல கால வழிபாடு தொடங்க உள்ளதால் பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இங்குள்ள பழங்குடி மக்களான மலைஅரையர் சார்பில் வனப்பாதை வழிபாடு நடைபெற்றது.

பக்தர்கள் எவ்வித சிரமமின்றி இந்தப் பாதையை கடந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதற்காக காளகட்டியின் ஐயப்பன் மற்றும் தேவதைகளுக்கு படையலிட்டு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதேபோல் அழுதா ஆற்றுப் பகுதியிலும் வழிபாடு நடைபெற்றது. பெருவழிப் பாதையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம் இது ஆகும். அழுதா ஆற்றில் குளித்து மலையேற்றத்தை தொடங்குவர். இப்பகுதி புனித யாத்திரையில் மிகவும் கடினமாக பாதை ஆகும். ஆகவே பக்தர்களுக்கு இதற்கான மன உறுதியையும், உடல் திறனையும் வழங்கும் மந்திரங்கள் முழங்கப்பட்டன.

இதுகுறித்து பூர்வீக குடி மக்கள் கூறுகையில், “எங்களின் மூதாதையர் ஐயப்பனை குல தெய்வமாக வழிபட்டுள்ளனர். காட்டு தேனை எடுத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளனர். சபரிமலையின் முதல் அர்ச்சகர் பழங்குடித் தலைவரான கரிமலை அரையன்தான். இதை உணர்த்தும் வகையில் சபரிமலையின் முதல் படியின் அடிப்பகுதியில் கரிமலை அரையன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. எங்கள் சமூக பாரம்பரிய பங்களிப்பு மற்றும் தொன்மையான மரபுகளை பாதுகாக்க இந்த வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றனர்.

பக்தர்கள் கூறுகையில், “இப்பாதையில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மேலும் இரவு நேர தடைகளை ஏற்படுத்தாமல் 24 மணி நேரமும் வனப்பாதையில் பயணிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்றனர். மலை அரையர் மகாசபை மற்றும் ஸ்ரீ ஐயப்ப தர்ம சங்கமும் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தன.

நெரிசல் அதிகரிப்பு- நிலக்கல், பம்பையில் தற்போது கேரள அரசுப் பேருந்துகள் போதுமான அளவு இயக்காததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் தாமதமாக தொடங்கிய சாலை சீரமைப்புப் பணி காரணமாகவும் வாகன நெரிசல் அதிகம் உள்ளது. இத்துடன் மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் பக்தர்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.

குமுளி அருகே சபரிமலை பாத யாத்திரை பக்தர்களுக்காக காட்டுப் பாதையில் சிறப்பு வழிபாடு
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு 2 நாள் அரசு விடுமுறை: குழந்தைகள், பெற்றோர் ஏமாற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in