

ஸ்ரீரங்கம் நம்பெருமாள்
ர.செல்வமுத்துகுமார்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அனைவராலும் போற்றப்படுவதுமான திருத்தலம் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதிலும் ஆண்டுக்கொருமுறை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலகப் பிரசித்தி பெற்றது.
இத்தகைய சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிச.19-ம் தேதி திருநெடுந்தாண்டகம் உற்சவத்துடன் தொடங்கியது. மறுநாள் (டிச.20) பகல்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்சவத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று (டிச.29) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு, ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று நடைபெற்றது.
அதற்காக இன்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, உள்ளிட்ட பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளினார்.
உள்பிரகாரங்களில் வலம் வந்து, திருச்சுற்றில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றி வந்து அதிகாலை 5.45 மணிக்கு தனுர் லக்னத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்தார். அப்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் "ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா.." என்று விண்ணதிர பக்தி முழக்கமிட்டவாறு நம்பெருமாளை பின்தொடர்ந்து சொர்க்கவாசலை கடந்துச் சென்றனர்.
அதன்பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் முன்புள்ள திருகொட்டகையில் பக்தி உலாத்துதல் என்ற நம்பெருமாள் பிரவேசம் கண்டருளினார். தொடர்ந்து திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இன்று இரவு 11 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். இரவு ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைவார்.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்துள்ளனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் 3,000 போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமைச்சர் முகாம்: சொர்க்கவாசல் திறப்பு வைபத்தையொட்டி நேற்று (டிச.29) இரவே இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து விட்டார். இங்கேயே முகாமிட்டு பக்தர்களுக்கு உண்டான வசதிகள், முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் இந்து சமய அறநிலைத்துறை உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
இன்று அதிகாலையில் நம்பெருமாள் சொர்க்கவாசல் கடந்த பின்னரே அமைச்சர் சேகர் பாபு ஸ்ரீரங்கத்தில் இருந்து கிளம்பி சென்றார். தொடர்ந்து அவர் சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.