

பழநி முருகன் கோயிலில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ராஜகோபுரம்.
பழநி: பழநி முருகன் கோயிலில் ரூ.30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள வண்ண மின் விளக்குகளால் மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரம் இரவில் நிறம் மாறி, ஜொலிக்கின்றன.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.99.98 கோடியில் பெருந்திட்ட வரைவு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழநி வரும்போது தொலைவில் இருந்தே ராஜகோபுரத்தை பார்க்க முடியும். இதனைப் பார்த்தே பக்தர்கள் பழநி மலையை நெருங்கி விட்டோம் என்பதை அறிந்து கொள்வர்.மலையேறி கோயிலுக்கு வர முடியாத பக்தர்கள் தொலைவில் இருந்து கோபுர தரிசனம் செய்வர்.
அதனால் பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவிலும் பக்தர்கள் கோபுர தரிசனம் செய்யும் வகையில், மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த வண்ண விளக்குகளை பொருத்தி இரவில் ஜொலிக்க வைக்க பழநி தேவஸ்தானம் திட்டமிட்டது.
அதன்படி, ரூ.30 லட்சம் செலவில் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, தற்போது தினமும் மாலை 6 முதல் காலை 6 மணி வரை, மின் விளக்குகள் ஒளிர விடப்படுகின்றன.
இந்த மின் விளக்குகள் பச்சை, நீலம், மஞ்சள் என பல வண்ணங்களில் நிறம் மாறி, மாறி மிளிர்வதால் பக்தர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர். மேலும், வண்ண விளக்குகளால் இரவில் ஜொலிக்கும் மூலவர் விமானம் மற்றும் ராஜகோபுரத்தின் அழகை பக்தர்கள் தெளிவாக பார்க்கவும், தொலைவில் இருந்தபடி கோபுர தரிசனமும் செய்யவும் முடிவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.