பெருவழிப் பாதை பக்தர்களுக்காக சபரிமலையில் தரிசன முன்னுரிமை திட்டம் விரைவில் அமல்

பெருவழிப் பாதை பக்தர்களுக்காக சபரிமலையில் தரிசன முன்னுரிமை திட்டம் விரைவில் அமல்
Updated on
1 min read

குமுளி: எரிமேலி வனப்பாதை வழியே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

ஐயப்ப பக்தர்கள் பலரும் எரிமேலி வனப்பாதையில் செல்ல விரும்புகின்றனர். ஐயப்பனின் பூங்காவனம் என்று அழைக்கப்படும் இப்பகுதி, சுவாமி நடந்து சென்ற பாதை என்பது ஐதீகம். ஏற்ற இறக்கம், அதிக குளிர், வன விலங்குகள் நடமாட்டம், கற்பாறைகள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பக்தர்கள் இப்பாதையைக் கடந்து செல்கின்றனர்.

சுமார் 50 கி.மீ. தொலைவை 2 நாட்கள் சிரமப்பட்டு கடந்து பம்பையை அடையும் இவர்கள், மீண்டும் சபரிமலைக்கு 5 கி.மீ. மலையேறிச் செல்கின்றனர். ஆனால், பம்பை வரை வாகனத்தில் எளிதாக வரும் லட்சக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து இவர்களும் பயணிக்க வேண்டியுள்ளது.

ஏற்கெனவே வனப்பாதையைக் கடந்து உடல் சோர்வுடன் வரும் பக்தர்கள், பல மணி நேரம் தரிசனத்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, தரிசன முன்னுரிமை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் கூறும்போது, “எரிமேலி வனப் பாதையில் வரும் பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக வனப் பகுதியில் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, வழியில் முத்திரை பதிக்கப்படும். இந்த திட்டம் தொடர்பாக காவல் மற்றும் வனத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே குழப்பம் ஏற்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே, பக்தர்களின் அனுமதிச்சீட்டில் கல்லிடும் குன்று, கரிமலை ஏற்றம் ஆகிய இடங்களில் முத்திரையிட்டால், முறைகேடு நடைபெறாது. தகுதியான பக்தர்கள் மட்டுமே பயனடைவர்” என்றனர்.

பெருவழிப் பாதை பக்தர்களுக்காக சபரிமலையில் தரிசன முன்னுரிமை திட்டம் விரைவில் அமல்
திமுகவின் 2026 தேர்தல் அறிக்கை சவால்கள் என்னென்ன? - 2021 வாக்குறுதிகளை முன்வைத்து ஒரு பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in