திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை ரூ.25 கோடியில் அழகுபடுத்த திட்டம்

பாசி படர்ந்து அசுத்தமாக காட்சியளிக்கும் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம்.

பாசி படர்ந்து அசுத்தமாக காட்சியளிக்கும் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம்.

படம்: ர. செல்வமுத்துகுமார்

Updated on
1 min read

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் தெப்பக் குளத்தை ரூ.25 கோடி மதிப்பில் மிக பிரம்மாண்டமாக மேம்படுத்தி, அழகுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தை சுற்றி ஆக்கிரமித்திருந்த தரைக்கடைகள் மற்றும் பெட்டிக் கடைகள் ஆகியவை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன.

அப்புறப்படுத்தப்பட்ட கடைக்காரர்களுக்கு மாநகரின் பல்வேறு இடங்களில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தெப்பக்குளத்தை தூர் வாரும் பணிகள் தொடங்கின.

பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்புத் திட்டத்தின் கீழ் நிதி பெற்று ரூ.2 கோடி மதிப்பில் தெப்பக்குளத்தை தூர் வாரி, நடைபாதை, அமரும் இருக்கைகள், அலங்கார மின் விளக்குகள், அழகு செடிகள், சிறிய அளவிலான பொழுது போக்கு அம்சங்களுடன் அழகு படுத்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதில், முதல்கட்டமாக ரூ.25 லட்சம் மதிப்பில் தூர் வாரும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன் பிறகு தெப்பக்குளத்தை மேம்படுத்தி அழகுபடுத்தும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால் தூர் வாரப்பட்ட தெப்பக்குளத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி பாசி படர்ந்து துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது.

திருச்சியின் பெருமைமிகு தெப்பக்குளம் தற்போது அதன் பொழிவை இழந்து, பொதுமக்கள் வேதனையுடன் கடந்து செல்லும் இடமாக மாறியுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: தனியார் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பில் தெப்பக்குளத்தின் கரைகளை பலப்படுத்தி அழகுபடுத்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திட்டமிட்டிருந்தோம்.

முதல் கட்டமாக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு, குப்பை, வண்டல் மண் தூர் வாரப்பட்டது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் மேம்படுத்தி, அழகுபடுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன்பின், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ், அறநிலையத் துறை நிதியில் மலைக்கோட்டை தெப்பக்குளத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளார்.

இதற்காக ரூ.25 கோடி மதிப்பில் தெப்பக்குளத்தை மிக பிரம்மாண்டமாக மேம்படுத்தி, அழகுபடுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>பாசி படர்ந்து அசுத்தமாக காட்சியளிக்கும் திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளம்.</p><p></p></div>
கர்நாடகாவில் மனைவியை கொன்ற கணவர் கைது: வீடியோவை பெற்றோருக்கு பகிர்ந்ததால் அதிர்ச்சி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in