

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி, சண்டிகேசுவரர் சந்நிதியிலிருந்து கொடி புறப்பாடாகி, கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து, கொடிமரம் அருகே உற்சவ விநாயகர், சண்டிகேசுவரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். பின்னர், கொடிமரத்துக்கும் மூஞ்சூறு வாகனம் வரையப்பட்ட கொடிப்படத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விழா நாட்களில் தினமும் காலையில் வெள்ளிக் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் விநாயகர் எழுந்தருளி வீதி உலாநடைபெறும். செப்.10-ம் தேதி மாலை சூரனை விநாயகர் வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம், 13-ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 4.30 முதல் இரவு 10 மணி வரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் கற்பக விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
செப்.14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு மூலவருக்கு முக்குறுணி மோதகம் படையலிடப்படும். இரவு பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு ராமசாமி செட்டியார், அரிமளம் கண்ணன் செட்டியார் செய்து வருகின்றனர்.