

சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி, தாமோதரன் நம்பூதிரி
குமுளி: சபரிமலையில் மண்டல, மகர கால பூஜை வழிபாட்டுக்கான புதிய மேல்சாந்திகள் குடவோலை முறையில் நேற்று தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கார்த்திகை முதல் தேதியில் இருந்து வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளனர்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள சுவாமி ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர பூஜைக்கால வழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தலைமை அர்ச்சகர்கள் எனப்படும் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மண்டல வழிபாட்டுக் காலம் நவ.17-ல் தொடங்க உள்ளது. இதனால், புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான பணிகள் சில வாரங்களாகவே நடைபெற்று வந்தன.
முதல்கட்டத் தேர்வு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட தேர்வு சபரிமலையில் நேற்று நடைபெற்றது. முதல்கட்ட தேர்வில் தேர்வானவர்களின் பெயர்கள் அடங்கிய சீட்டுகளை போட்டு குடவோலை முறையில் தேர்வு நடந்தது.
பந்தள அரண்மனையைச் சேர்ந்த சிறுவன் தேவநந்தன் அர்ஜூன் (7) சபரிமலை மேல்சாந்தியையும், சிறுமி அனஸ்வர ரஞ்சித் (9) மாளிகைபுரம் மேல்சாந்தியையும் தேர்வு செய்தனர். அதன்படி, சபரிமலை புதிய மேல்சாந்தியாக அரீக்கரை சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். திருவனந்தபுரம் புளிமூடு பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 5 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் புகழ்பெற்ற பழவங்காடி கணபதி கோயிலின் மேல்சாந்தியாக பணியாற்றி உள்ளார்.
இதேபோல், மாளிகைபுரம் அம்மன் கோயில் மேல்சாந்தியாக பூழிக்கோடு எ.தாமோதரன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர் கோழிக்கோடு அருகே பய்யோலியில் உள்ள புகழ்பெற்ற கீழூர் மகாவிஷ்ணு கோயிலின் மேல்சாந்தியாக பணியாற்றியவர் ஆவார்.தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இருவரும் வரும் கார்த்திகை முதல் தேதியில் இருந்து ஐயப்பன் மற்றும் மாளிகைபுரத்தம்மனுக்கு பல்வேறு வழிபாடுகளை நடத்த உள்ளனர். இதற்காக இருவரும் இருமுடி கட்டி, நவ.16-ம் தேதி சபரிமலைக்கு வருவர். அவர்களை 18-ம் படி வழியே அழைத்துச் சென்று புனிதநீர் தெளித்து சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். மறுநாள் முதல் இவர்கள் நேரடியாக வழிபாடுகளை மேற்கொள்வார்கள்.