

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணத்தில் கட்டப்பட்டு வரும் சமயபுரம் மாரியம்மன் கோயில். (உள்படம்) ஸ்ரீரங்கபட்டணத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சமயபுரம் மாரியம்மன்.
சென்னை: கர்நாடக மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டணம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்டணம் பாபுராயனகொப்புலுவில் காவிரி நதிக்கரையில் சமயபுரம் மகா மாரியம்மன் கோயில் நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள திருச்சி காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில் போலவே நிறுவப்பட்டுள்ள இக்கோயிலில் ஜூன் 25-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
குருநாதர் ஸ்ரீ சுரேஷ்வர ஆச்சார்யா தனது ஸ்தூல குரு கைலாச ஆசிரம ஸ்தாபகர் ஸ்ரீ திருச்சி மகா சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி ஸ்ரீரங்கபட்டணத்தில் காவிரி, லோகபாவனி நதிகள் சங்கமத்தில் திருச்சி சமயபுரம் கோயில் போலவே ஸ்ரீரங்கபட்டணம் ஸ்ரீரங்கநாதர் கோயில், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் இக்கோயிலை அமைத்துள்ளார்.
இக்கோயில் குறித்து நிர்வாகிகளுள் ஒருவரான ஸ்ரீகாந்த் சண்முகம் கூறும்போது, “ஆகம விதிகளின்படி, திராவிட கட்டிடக்கலை நுட்பத்தில் கருங்கற்களைப் பயன்படுத்தி கோயிலை அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் கடந்த 15 ஆண்டுகளாக 3.5 ஏக்கர் நிலப்பரப்பில், 75,000 சதுர அடி பரப்பளவில் இக்கோயில் கட்டப்பட்டு வந்தது. 2 பிரகாரங்கள், 50 தூண்கள், 5 பிரம்மாண்ட கோபுரங்கள், 9 நிலை ராஜகோபுரம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. இந்த ராஜ கோபுரம் இப்பகுதியிலேயே மிகவும் உயரமான ராஜகோபுரம் ஆகும்.
மூலவர் எழுந்தருளியிருக்கும் கருவறை (உள் பிரகாரம்), மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. கருவறையில் உள்ள அம்மனைச் சுற்றி, அஷ்ட மாரியம்மன்கள், அஷ்ட மகா துர்கைகள், அஷ்ட துர்கைகள், அஷ்ட லட்சுமிகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்ட 38 பிரம்மாண்டமான கருங்கல் தூண்கள் அமைந்துள்ளன. கோயிலின் நுழைவாயிலில் 2 பெரிய யாளிச் சிற்பங்களும், விநாயகர் மற்றும் சுப்பிரமணியரின் நேர்த்தியான சிலைகளும் அமைந்துள்ளன. அதேவேளையில், 52 அடி உயரமுள்ளராஜகோபுரத்தின் இருபுறமும் காளி, மகிஷாசுரமர்த்தினி ஆகியோரின் சிலைகள் காவல் தெய்வங்களாகத் திகழ்கின்றன.
மூன்றாவது பிரகாரம் அமைக்கும் பணி இரண்டாம் கட்டத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆன்மிகச் செயல்பாடுகளுக்கான ‘தேவி மண்டபம்’, அன்னதானத்துக்கான ‘அன்னபூரணி மண்டபம்’, ஆன்மிக குருவின் வழிகாட்டுதலில் கல்வி பயில ‘குருகுலம்’, கோமாதா காமதேனுவை வழிபடுவதற்கான ‘கோசாலை’, சுவாமிஜி தங்குவதற்கான ‘குடில்’, வருகை தரும் சாதுக்கள், சேவகர்கள் தங்குவதற்கான இருப்பிடங்கள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுக்கான ‘பவன்’ ஆகியவை அடங்கும்.
இக்கோயிலில் குடமுழுக்கு வைபவம், ஸ்ரீ திருச்சி ஞானதேசிக மகா சுவாமிகளின் ஆசியுடன், ஸ்ரீ ஜெயேந்திரபுரி மகா ஸ்வாமி தலைமையில், ஸ்ரீ சதாசிவபுரி பகவத்பாதாச்சார்ய சுவாமி ஸ்ரீ சுரேஷ்வர ஆச்சார்யாவின் சங்கல்பத்தின்படி ஜூன் 25-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை அம்மனின் புஷ்ப பல்லக்கு புறப்பாடு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். கூடுதல் விவரங்களை https://srisamayapuramashrama.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.