

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வீரவசந்தராயர் மண்டபம்.
மதுரை: தீ விபத்தில் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஆக. 30-ம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கிழக்கு கோபுர வாசல் அருகே வீரவசந்தராயர் மண்டபத்திலிருந்த கடைகளில் 2018 பிப். 2-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் முழுமையாக சேதமடைந்தது. அப்போதைய அதிமுக ஆட்சியில் ரூ.18.10 கோடியில் மண்டபத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் பட்டணம் கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை வெட்டி எடுக்க முடிவெடுக்கப்பட்டது. அங்கிருந்து, கோயிலுக்கு சொந்தமான மதுரை கூடல்செங்குளம் பண்ணையில் வைத்து 79 தூண்கள், போதியல், சிம்மம், உத்திரம், சிம்ம பீடம், கபோதகம், கொடிவலை, நாடக சட்டம், தூண்கள், பாவுக்கற்கள் மற்றும் இதர அணிகலன்களை வடிவமைத்து பொருத்தும் பணியை மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்தன.
ஆனால், கரோனா ஊரடங்கு, ஒப்பந்தம் விடுவதில் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் பணிகள் தள்ளிப்போனது. பின்பு கற்களை வெட்டி எடுக்கும் பணிக்கான தொடக்க விழா 2020 செப்டம்பரில் நடந்தது. அப்போது, கற்களை வெட்டி எடுக்க அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. வழக்கில் கோயிலுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததால் கற்கள் வெ்ட்டி எடுக்கும் பணி தொடங்கியது.
கரோனா 2-வது அலை காரணமாக பட்டணம் கிராமத்தில் கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கும் பணி மீண்டும் தடைப்பட்டது. 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்பு பணிக்கான புதிய மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்படி, ரூ38.30 கோடியில் மண்டபத்தை கட்ட முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து 2021 ஜூலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை செதுக்கும் பணி கோயிலுக்கு சொந்தமான கூடல் செங்குளம் பண்ணையில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் திருமுருகன்பூண்டி ஸ்தபதி வி.பி.வேல்முருகன் மூலம் கற்களை வடிவமைத்துப் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.
2026-ல் தவெக ஆட்சிக்கு வந்த நிலையில், மண்டப சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. கடந்த ஜூன் 18-ம் தேதி இந்த மண்டபத்துக்கான 79 தூண்களையும் நிறுவும் பணி நிறைவுபெற்றது. பின்னர், மேற்கூரை உள்ளிட்ட பிற பணிகள் நடைபெற்றன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு மண்டபப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.
வரும் செப். 17-ம் தேதி கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆக. 30-ம் தேதியே வீரவசந்தராயர் மண்டபத்தைத் திறக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.