17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம்

6,500 போலீஸார் பாதுகாப்புக்கு ஏற்பாடு
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம்
Updated on
2 min read

மதுரை: மதுரை மீனாட்சி அம்​மன் கோயில் குட​முழுக்கு விழா, 17 ஆண்​டு​களுக்​குப்பிறகு இன்று காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்​குள் கோலாகல​மாக நடை​பெறுகிறது.

மதுரை மீனாட்சி சுந்​தரேசுவரர் கோயில் இரண்​டா​யிரம் ஆண்​டு​களுக்கு மேற்​பட்ட பழமை​யான வரலாற்​றைக் கொண்​டது. மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் வெறும் வழி​பாட்​டுத் தலம் மட்​டுமன்​றி, தமிழ்​மொழி, சங்​கம், கலை மற்​றும் பண்​பாட்​டின் தொன்​மை​யான மையப் புள்​ளி​யாகத் திகழ்​கிறது.

இத்​தகைய சிறப்​பு​கள் வாய்ந்த இக்​கோயி​லின் குட​முழுக்கு விழா 2021-ல் நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. ஆனால், பல்​வேறு காரணங்​களால் தள்​ளிப்​போனது.

தொடர்ந்து கோயில் நிதி மற்​றும் உபய​தா​ரர் நிதி​யில் குட​முழுக்கை நடத்த ரூ.28 கோடி மதிப்​பில் கோயி​லின் 12 கோபுரங்​களுக்​கும் வண்​ணம் பூசும் பணி​கள், சேதமடைந்த சுதைச் சிற்​பங்​களைச் சீரமைப்​பது உள்பட பல்​வேறு திருப்​பணி​களும் நடந்​தன. பணி​கள் நிறைவடைந்த நிலை​யில் 17 ஆண்​டு​களுக்​குப் பின் இன்று குட​முழுக்கு நடை​பெறுகிறது.

இதை முன்​னிட்டு கோயிலுக்​குள் வடக்​காடி வீதி​யில் யாக​சாலை பூஜைகளுக்​காக 184 குண்​டங்​கள் அமைக்​கப்​பட்​டன. செப்​.6-ல் பூர்​வாங்க பூஜைகள் தொடங்​கின. செப்​.11-ம் தேதி மாலை முதல் கால யாக​சாலை பூஜை தொடங்​கியது. மூல​வர் மீனாட்சி அம்​மன், சுந்​தரேசுவரர் சுவாமிக்கு மருந்து சாற்​றும் வைபவத்​தையொட்டி செப்​.11 முதல் 16-ம் தேதி வரை மூல​வர் சந்​நி​தி​கள் அடைக்​கப்​பட்​டுள்​ளன. யாக​சாலை பூஜைகள் தொடங்கி 6-ம் நாளான நேற்று செப்​.16-ம் தேதி காலை 5 மணி​யள​வில் பத்​தாம் கால யாக வேள்வி முடிந்து கலசங்​கள் புறப்​பாடு நடை​பெற்​றது.

காலை 6 மணிக்​குள் தெட்​சிணா​மூர்த்​தி, துர்க்​கை, லெட்​சுமி, பத்​ர​காளி, 63 நாயன்​மார்​கள் மற்​றும் சுற்​றுக்​ கொடி மரங்​கள் உட்பட 414 பரி​வார தெய்​வங்​களுக்கு நேற்று குட​முழுக்கு நடை​பெற்​றது. குட​முழுக்கை முன்​னிட்டு கோயி​லில் உள்ள 4 கோபுரங்​கள் உட்பட 12 கோபுரங்​களுக்​கும் நிலை மாலைகள் சாற்​றப்​பட்​டன.

இன்று (செப்​.17) காலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ம் கால யாக வேள்வி நடை​பெறும். பின்பு கலசங்​கள் புறப்​பா​டாகி காலை 7.40 மணி​யள​வில் மீனாட்​சி, சுந்​தரேசுவரர் சந்​நி​தி​களின் தங்க விமானங்​கள் மற்​றும் ராஜகோபுரக் கலசங்​களுக்கு ஒரே நேரத்​தில் குட​முழுக்கு விழா நடை​பெறும். 7.55 மணிக்கு மூல​வர் மீனாட்சி அம்​மனுக்​குக் குட​முழுக்​கும், காலை 8.10 மணிக்கு மூல​வர் சுந்​தரேசுவரர் சுவாமிக்​கும் குட​முழுக்கு நடை​பெறும்.

குட​முழுக்​கில் பங்​கேற்க 3 ஆயிரம் உபய​தா​ரர்​கள், பொது மக்​களில் 2 ஆயிரம் பக்​தர்​களுக்​குக் குலுக்​கல் முறை​யில் பாஸ் உட்பட 11 ஆயிரம் பேருக்​குப் பாஸ்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. இதில் கோயி​லின் மேல்​தளத்​தில் 9 ஆயிரம் பேர் வரை அனு​ம​திக்​கப்​படு​கின்​றனர்.

இவ்​விழா​வில் பல்​வேறு மடங்​களின் ஆதீனங்​கள், அமைச்​சர்​கள் ரமேஷ் (அறநிலை​யத் துறை), நிர்​மல் குமார் (சட்​டத் துறை), பெ.​விஸ்​வ​நாதன் (உயர் கல்​வி) மற்​றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உயர​தி​காரி​கள் பங்​கேற்​கின்​றனர். மாநகர காவல் ஆணை​யர் ராஜேந்​திரன் தலை​மை​யில் 6,500 போலீ​ஸாருடன் மூன்​றடுக்​குப் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

பக்​தர்​களுக்கு அவசர சிகிச்சை அளிக்க 27 இடங்​களில் 54 மருத்​துவ முகாம்​கள், 12 ஆம்​புலன்ஸ் வாக​னங்​களு​டன் 70 மருத்​து​வர்​கள் மற்​றும் 150 துணை மருத்​து​வப் பணி​யாளர்​கள் தயார் நிலை​யில் உள்​ளனர். அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் 50 படுக்​கைகள் கொண்ட சிறப்பு வார்​டு​கள் தயார் நிலை​யில் உள்​ளன.

மாநக​ராட்சி சார்​பில் குடிநீர், கழிப்பறை உட்பட அத்தியாவசிய தேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கோயில் சார்​பில் மஞ்​சள், குங்​குமம், விபூ​தி, தண்​ணீர், பிஸ்​கட் அடங்​கிய 2 லட்​சம் பிர​சாதப் பைகள் வழங்​கப்​படு​கின்​றன.

பக்​தர்​கள் நெரிசலின்றி குட​முழுக்​கைக் காணும் வகை​யில் பேருந்து நிலை​யங்​கள், ரயில் நிலை​யம், பார்க்​கிங் பகு​தி​கள் மற்​றும் முக்​கிய வீதி​களில் 51 எல்​இடி திரைகள் அமைக்​கப்​பட்டு நேரலை செய்​யப்​படு​கின்​றன. அனைத்​துத் துறைப் பணி​களை​யும் ஒருங்​கிணைக்க புது​மண்​டபத்​தில் ஒருங்​கிணைந்த கட்​டளை மற்​றும் கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளன. 1800-425-6781 மற்​றும்​ 1800-425-6782 ஆகிய கட்​ட​ணமில்​லா தொலைபேசி எண்​கள்​ அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. குட​முழுக்​கை முன்​னிட்​டு நகரில்​ போக்​கு​வரத்​து மாற்​றங்​களும்​ செய்​யப்​பட்​டுள்​ளன.

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம்
பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி புகார்: அன்பில் மகேஸ் வீடுகள் உட்பட 9 இடத்தில் சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in