

மதுரை சித்திரைத் திருவிழாவில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகரை தரிசிக்க திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி. உள்படம்: சித்திரைத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.படங்கள்: நா.தங்கரத்தினம்
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று அதிகாலை 5.48 மணியளவில் நடைபெற்றது. கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரண்டிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
மதுரை அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்.27-ல் தொடங்கியது. முதல் நாள், இரண்டாம் நாள் மாலையில்
சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் தோளுக்கினியான் பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார். மூன்றாம் நாள் (ஏப்.29) சுந்தரராஜப் பெருமாள், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகராக தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். வழிநெடுகிலும் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளினார்.
நான்காம் நாள் (ஏப்.30) மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெற்றது. பின்னர் புதூர் மாரியம்மன் கோயில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோயில், அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயில், அம்பலகாரர் மண்டகப்படிகளில் எழுந்தருளினார். அன்றிரவு 8.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த பிரம்மாண்ட மாலையை சூடிக்கொண்டார்.
ஐந்தாம் நாளான நேற்று (மே 1) அதிகாலை கோயிலிலிருந்து புறப்பாடாகி, தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன் 2.30 மணியளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து ஆழ்வார்புரம் வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். முன்னதாக கள்ளழகரை வரவேற்கும் வகையில் எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவ பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் 4 மணியளவில் எழுந்தருளினார். ஆழ்வார்புரம் மண்டகப்படிகளில் கள்ளழகர் அதிகாலை 4.42 மணிக்கு வந்தடைந்தார்.
அங்கு பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வைகை ஆற்றுக்கு அதிகாலை 5.40 மணிக்கு வந்தார். கோயில் நிர்வாகம் சார்பில் மனோரஞ்சிதம், நாணயங்களுடன் கூடிய 7 அடி நீள மாலை சாற்றப்பட்டது. அப்போது ஆற்றுக்குள் அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்க அதிகாலை 5.48 மணிக்கு கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். அங்கு திரண்டிருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா’ என விண்ணதிர முழக்கமிட்டு அழகரை தரிசித்தனர்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதி புகழேந்தி, அமைச்சர் பி. மூர்த்தி,அறநிலையத் துறை ஆணையர் தர், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாநகர் காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், சு.வெங்கடேசன் எம்.பி., எம்எல்ஏக்கள் ராஜன் செல்லப்பா, அய்யப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.பின்னர் வைகை ஆற்றிலிருந்து கள்ளழகர் 7.35 மணியளவில் ராமராயர் மண்டகப்படிக்குப் புறப்பட்டார். அங்கு நேர்த்திக்கடன் செலுத்த ஏராளமான பக்தர்கள் நாலாபுறமும் துருத்தியில் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்வித்தனர். இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார்.
இன்று (2-ம் தேதி) தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடைபெறும். நாளை ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபம் செல்கிறார். மறுநாள் அங்கிருந்து அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.
தொடர்ந்து கருப்பணசாமி கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மலைக்குத் திரும்புகிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணியளவில் கோயிலை அடைகிறார். மே 6-ம் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பச்சைப் பட்டின் மகிமை: ஆண்டுதோறும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது எந்த நிறத்தில் பட்டு உடுத்தி இறங்குகிறார் என மக்கள் எதிர்பார்ப்போடு இருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளழகர்பச்சைப் பட்டு உடுத்தி இறங்குவதைப்போல் இந்தாண்டும் பச்சைப் பட்டு உடுத்தி இறங்கினார். இதனால் நடப்பாண்டும் நல்ல மழைப் பொழிந்து பயிர்கள் விளைந்து விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.