

சிக்கல் கோயிலில் அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் இருந்து சிங்காரவேலவர் வேல் வாங்கிய காட்சி. அடுத்தபடம். அப்போது சிங்காரவேலவர் முகத்தில் வியர்வை துளிகள் அரும்பின.
தூத்துக்குடி/நாகப்பட்டினம்: திருச்செந்தூரில் சூரசம்ஹார விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
சூரனை வதம் செய்வதற்காக சிக்கலில் அ்ன்னை வேல்நெடுங்கண்ணியிடம் இருந்து முருகப் பெருமான் சக்திவேலை பெறும் நிகழ்வு நேற்று நடந்தது,தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா, கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
அன்றுமுதல் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். விழாவையொட்டி, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (15-ம் தேதி) கோயில் கடற்கரையில் நடக்கிறது. இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 6 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும் யாகவேள்வி நடக்கிறது.
மாலை 4 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரைக்கு எழுந்தருள்கிறார். அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. யானை, சிங்கம், சுயரூபம் ஆகிய ரூபங்களில் வரும் சூரபத்மனை வதம் செய்து, சேவலும், மயிலுமாக ஆட்கொள்கிறார். சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை முதலே திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர்.
காவடிகள் எடுத்தும், கடவுளர்கள் போல் வேடமணிந்தும் ஏராளமானோர் பாதயாத்திரையாக வந்தனர். சூரசம்ஹார விழாவைக் காண 5 முதல் 6 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு தலைமையில் 4,100 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தனிநபர் வாகனங்களுக்கான சிறப்பு அனுமதி அட்டை வழங்கப்பட மாட்டாது. திருச்செந்தூர் நகருக்குள் பக்தர்கள் வசதிக்காக கட்டணமில்லா 4 மினி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அன்னையில் வாங்கிய வேல்: நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோயில் உள்ளது. முருகப் பெருமான், இக்கோயிலில்தான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் இருந்து சக்திவேலை பெற்றுச் சென்று திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது. சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.10-ம் தேதி தொடங்கியது. நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, மாலையில் முக்கிய நிகழ்ச்சியாக தனது தாயார் வேல்நெடுங்கண்ணியிடம் முருகப் பெருமான் சக்திவேல் வாங்கும் உற்சவம் நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் முருகப் பெருமான் மீது பூக்களை தூவி அரோகரா என முழக்கமிட்டனர். வேல் வாங்கும் நிகழ்வின்போது, சிங்காரவேலவரின் மேனி முழுவதும் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் அரும்பின. இந்த அதிசய நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.