

திருமலை: திருமலையில் ஜூன் 26-ம் தேதி முதல் 28ம் தேதி வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஜேஷ்டாபிஷேக உற்சவம் நடைபெறுவது ஐதீகம். இந்த உற்சவம் வரும் 26-ம் தேதி தொடங்கி, 28ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. விசாக நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த உற்சவம் கேட்டை நட்சத்திரத்தில் நிறைவு பெறும். திருமலையில் உள்ள சம்பங்கி மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு 3 நாட்களும் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இதில் மலையப்பர் அணிந்திருக்கும் தங்க கவசம் அகற்றப்பட்டு, திருமஞ்சனத்திற்கு பிறகு வைர கவசம் அணிவிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறும். 2ம் நாள் வைர கவசம் அகற்றப்பட்டு, முத்து கவசம் அணிவிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறும். 3வது நாள், முத்து கவசம் அகற்றப்பட்டு, மீண்டும் தங்க கவசம் அணிவிக்கப்படும். இந்த கவசம் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜேஷ்டாபிஷேகம் வரை அகற்றப்படாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ஜூன் 28ம் தேதி திருமலையில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவ சேவை போன்றவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.