

பழநி: சுதந்திர தின விடுமுறையையொட்டி, பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை முதலே வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால், மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வருடாந்திர பராமரிப்புப் பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வழக்கத்தை விட வின்ச் ரயிலில் செல்ல கூட்டம் அலைமோதியது. அன்னதானக் கூடத்திலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இரவில் தங்க ரதத்தில் எழுந்தருளிய சின்னக் குமார சுவாமியை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
இதேபோல், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், மாரியம்மன் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வெளியூர் பக்தர்கள் வந்த வாகனங்களால் பழநியில் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.