

சென்னை: வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை வியாசர்பாடியில் பழமை வாய்ந்த மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து, ரிஷப வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, அதிகார நந்தி சேவை, பூத வாகனம், பவளக்கால் விமானம், நாக வாகன உற்சவங்கள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் எழுந்தருளினார். 8.30 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
மூர்த்திங்கர் தெரு, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, முத்து முதலி தெரு, கரைகாத்த ராமர் திருக்கோயில் தெரு ஆகிய வீதிகளில் தேர் அசைந்தாடி வந்தது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘நமச்சிவாய’ கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
வியாசர்பாடி மார்க்கெட் சந்திப்பில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். மதியம் 3 மணி அளவில் தேர் மீண்டும் நிலையை வந்த டைந்தது.
இந்த தேரோட்ட விழாவில், சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் சு.தனசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜூன் 22-ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், அதன்பிறகு 23-ம் தேதி கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.