திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கங்காவதரண மகோற்சவம்: ஆயிரக்கணக்கானோர் புனித நீராடல்!

கங்காவதரண மகோற்சவம்

கங்காவதரண மகோற்சவம்

Updated on
1 min read

கும்பகோணம்: திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கங்காவதரண மகோற்சவம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.

திருவிடைமருதூர் வட்டம், திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், கார்த்திகை அமாவாசையொட்டி கங்காவதரண மகோற்சவ நீராடல் நவ.19-ம் தேதி நடைபெற்றது. கும்பகோணம் அருகே திருவிசநல்லூரில் ஸ்ரீதரஅய்யாவாள் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். பக்திநெறி தவறாமல் வாழ்ந்து வந்த இவர், ஒரு சமயம் தன் தந்தையாருக்கு நீத்தார் கடனைச் செலுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இதற்காக புரோகிதர்கள் சிலரை வரவழைத்தார். சம்பிரதாயப்படியான சடங்குகள் எல்லாம் முடிந்த பிறகு அந்த புரோகிதர்களை நீத்தாராகப் பாவித்து வணங்கி, அவர்களுக்கு உணவிட்ட பிறகு தான் குடும்பத்தில் உள்ளவர்கள் பசியாற வேண்டும்.

அந்த நேரத்தில், ஸ்ரீதரஅய்யாவாள், வீட்டு வாசலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் பசியால் சுருண்டு விழுந்து கிடந்ததைப் பார்த்துவிட்டார். உடனே சமைத்து வைத்திருந்த உணவை எடுத்துச் சென்று, பசியால் மயங்கிக் கிடந்த அவருக்கு ஊட்டிவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த புரோகிதர்கள், அவரை சபித்தனர். இங்கு தீட்டுபட்டுவிட்டது. நீ கங்கைக்குச் சென்று நீராடி வந்தால் தான் அவை சரியாகும் எனக் கூறினர். அவரும், கங்கை சென்று நீராடி வர பல மாதங்கள் ஆகும். அதுவரை தந்தையின் பிதுர்கடன் தீராமல் அல்லவா இருக்கும் என்ன செய்வது என கடவுளை நினைத்து வேண்டினார்.

அப்போது அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் கங்கை நீர் பொங்கியது. இந்த நீர் தெருவெங்கும் ஓடியதால் வீடுகள் அனைத்தும் நீரால் சூழ்ந்தது. உடனடியாக மக்கள், அவரிடம் வந்து முறையிட்டு கங்கையை அடக்குமாறு வேண்டினர். அதே போல் அவரும் செய்தார். இதே போல் ஆண்டுதோறும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று, அவரது வீட்டின் கிணற்றிலிருந்து கங்கை பொங்கி வருவதாகவும், அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதும் வழக்கம்.

நிகழாண்டு இந்த விழா கடந்த 10-ம் தேதி முதல் வரும் 20-ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியான நவ.19-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கங்கா பூஜை, கங்காஷ்டக பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து 6 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காவிரி ஆற்றிலும், ஸ்ரீதர அய்யாவாள் வீட்டின் கிணற்றிலும் புனித நீராடினர்.

அப்போது ஸ்ரீதர அய்யாவாள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 11 மணிக்கு ஆராதனை, நவ.20-ம் தேதி ஸ்ரீதரஅய்யாவாள் புறப்பாடு, ஆஞ்சநேய உத்ஸவ, மகா தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>கங்காவதரண மகோற்சவம்</p></div>
தை அமாவாசை: அக்னி தீர்த்தக் கடற்கரையில் தீர்த்தவாரி நேரம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in