

கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சாணியடிக்கும் திருவிழாவில் பங்கேற்றவர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணி உருண்டைகளை வீசி மகிழ்ந்தனர்.
ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கும்டாபுரம் பீரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சாணியடிக்கும் திருவிழாவில் தமிழகம், கர்நாடகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மட்டுமின்றி, போலந்து நாட்டு சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்டம் தமிழகம் - கர்நாடக எல்லையில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகை முடிந்து 3-வது நாள் சாணியடிக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை கோயிலில் சிறப்புப் பூஜைகளுடன் விழா தொடங்கியது. முன்னதாக, கிராமத்தில் உள்ள பசுக்களின் சாணம் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து, விழாக் குழுவினர் ஊர் எல்லையில் உள்ள குளத்தில் சிறப்புப் பூஜைகள் செய்தனர்.
பின்னர், மேளதாளங்கள் முழங்க பக்தர்களை விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெற்றுடம்புடன் கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டிருந்த சாணத்தை உருண்டைகளாகப் பிடித்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்தனர்.
இந்த சாணத்தை விவசாய நிலங்களில் இட்டால் விவசாயம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், கிராம மக்கள் நோயின்றி வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், கால்நடைகளை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்கவும், கிராமம் வளம் பெறவும் இந்த விழா பாரம்பரியமாக நடத்தப்படுவதாகக் கிராம மக்கள் தெரிவித்தனர்.
பிரசித்தி பெற்ற பீரேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சாணியடிக்கும் திருவிழாவில் போலந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர். அவர்கள் விழாவை புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்ததுடன், தாங்களும் சாணி உருண்டைகளை ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடி மகிழ்ந்தனர். முதல்முறையாக வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் விழாவில் பங்கேற்றது கிராம மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.