

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கருட வாகனத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள்.
மதுரை: கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6-ம் நாளான நேற்று காலை வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் கோலத்தில் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
அதை தொடர்ந்து கருட வாகனத்தில் புறப்பட்டு, பல்வேறு மண்டகப்படிகளில் பிரசன்னமாகி வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்துக்கு பிற்பகல் 1.15 மணியளவில் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமாகி மாலை 3.45 மணியளவில் கருட வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் மண்டகப்படி முன்பு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வுக்காக, கோயில் இணை ஆணையர் ரா.ஹரிஹரன் ஏற்பாட்டில் புதிதாக கான்கிரீட் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது.
அப்போது மண்டூகமாக (தவளையாக) மாறிய முனிவரை நாரைகள் கொத்தி தின்று விடாமல் சுந்தரராஜபெருமாள் காப்பாற்றும் திருவிளையாடல் தத்ரூபமாக நிகழ்த்தி காட்டப்பட்டது. அதன் கரையில் மண்டூக முனிவர் சிலையும், அங்கு உயிருடன் நாரையும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மாலை 4.13 மணியளவில் சுந்தரராஜ பெருமாள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அப்போது கட்டியிருந்த நாரை அவிழ்த்து விடப்பட்டது.
அந்த நாரை தென்மேற்குத் திசை நோக்கி பறந்து வைகை ஆற்று தண்ணீரை தொட்டுச் சென்றதால், விவசாயம் செழிக்கும் என்று பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர், சுந்தரராஜ பெருமாள் மாலை 4.33 மணியளவில் மண்டகப்படியை 3 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேனூர் மண்டபத்தைச் சேர்ந்த 7 கரைக்காரர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பி்ல் மரியாதை செலுத்தப்பட்டது. மாலை 4.52 மணிக்கு மண்டகப்படியிலிருந்து புறப்பட்டு அனுமார்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றார். அங்கு அங்கப்பிரதட்சணம் நடைபெற்றது. பின்னர் வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளியபடி ராமராயர் மண்டபம் சென்றார். அங்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெற்றது.
இன்று ராமராயர் மண்டகப்படியிலிருந்து பிற்பகல் 2.30 மணியளவில் அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். அப்போது வைகைக் கரையின் அக்கரையில் சிம்மக்கல் திருமலைராயர் படித்துறையில் அழகரின் சடாரிக்கு பூஜை நடைபெறுகிறது. மே 4-ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திலிருந்து அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.
கருப்பணசாமி கோயில், தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மலைக்கு திரும்புகிறார். மே 5-ம் தேதி காலை 10.40 மணியளவில் கோயிலை அடைகிறார். மே 6-ல் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.