

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கம்பத்தடியில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் எழுந்தருள நடைபெற்ற சித்திரைத் திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஏப்.28-ம் தேதி நடைபெறுகிறது. மதுரை சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.30-ம் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான நேற்று கொடியேற்றத்தையொட்டி சுவாமி சந்நிதி முன்புள்ள கம்பத்தடி மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அப்போது, மீனாட்சி அம்மன், பிரியாவிடை சுந்தரேசுவரர் தனித்தனியாக வெள்ளி சிம்மாசனத்தில் காலை 10.30 மணியளவில் எழுந்தருளினர். அங்கு யாகசாலை அமைத்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், காலை 10.41 மணியளவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. கொடிமரத்தின் மேலிருந்து மலர்கள் தூவப்பட்டன. பின்னர், தீப, தூப ஆராதனை நடைபெற்றது நண்பகல் 12 மணியளவில் கொடி மரம் முன்பிருந்து சுவாமி, அம்மன் புறப்பட்டு, சுவாமி சந்நிதி 2-ம் பிரகாரத்தில் 3 முறை வலம் வந்து கோயிலுக்குள் உள்ள மண்டகப்படியில் எழுந்தருளினர்.
இவ்விழாவில் ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா, அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையர் நா.சுரேஷ் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர். நேற்றிரவு கற்பக விருட்ச வாகனத்தில் பிரியாவிடை சுந்தரேசுவரர், சிம்ம வாகனத்தில் மீனாட்சி அம்மன் மாசி வீதிகளில் எழுந்தருளினர்.
அப்போது, குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் மீனாட்சி அம்மன் வேடமிட்டு வரவேற்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும் காலை, இரவு இரு வேளைகளும் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் எழுந்தருளுகின்றனர்.
திருவிழாவின் 8-ம் நாள் (ஏப்.26) இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அன்றிலிருந்து ஆவணி மாதம் வரை 4 மாதங்கள் மதுரையில் மீனாட்சி அம்மனின் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். ஒன்பதாம் நாள் (ஏப்.27) திக்கு விஜயம், 10-ம் நாள் (ஏப்.28) திருக்கல்யாணம் நடைபெறும்.
11-ம் நாள் தேரோட்டமும் 12-ம் நாள் (ஏப்.30) தீர்த்தவாரியும் நடக்கிறது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், இணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் நடக்கிறது.