

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் திருச்சேறையில் உள்ள சாரநாயகி தாயார் உடனாய சாரநாதப் பெருமாள் கோயிலில் ரூ.1.19 கோடி மதிப்பில் 120 நாளில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட தேருக்கான வெள்ளோட்டம் நடைபெற்றது.
சிறப்பு பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட மரத்தினாலான தேர் கட்டுமானங்கள் சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, ரூ.1.19 கோடி மதிப்பில் மராமத்து பணிகள் மேற்கொண்டு தேர் வடிவமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கி 120 நாட்களில் வடிவமைக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், முன்னாள் எம்பி செ.ராமலிங்கம், அறநிலையத் துறை தக்கார் ச.சிவசங்கரி, செயல் அலுவலர் ரெ.அய்யப்பன், கணக்காளர் ராஜா மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இது தொடர்பாக கோயில் அதிகாரிகள் கூறியதாவது: ”இந்தக் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன் வடிவமைக்கப்பட்ட தேர், கடந்தாண்டு வரை தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் தேர் அச்சு, 4 சக்கரம் மற்றும் மொம்மைகளை தவிர மற்ற மரத்தினாலான கட்டுமானங்கள் சேதமடைந்து காணப்பட்டது.
இதனால், ரூ.1.19 கோடி மதிப்பில், 22 அடி உயரத்தில், 20 அடி அகலத்தில், 120 டன் எடையில் 120 நாட்களுக்குள் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு தேர் வடிவமைக்கப்பட்டு தற்போது வெள்ளோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வழக்கம் போல் தைப்பூச தினமான இந்த தேர் பயன்படுத்தப்படவுள்ளது. அதன்படி 2026ம் ஆண்டு பிப்.1ம் தேதி முதல் இந்த தேர், தேரோட்டத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.