

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில்
ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை மறுநாள் (ஜன.3) ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
ராமேசவரம் ராமநாதசுவாமி கோயில் ருத்ராட்சை நடராஜர் மண்டபத்தில் கடந்த டிச.25 அன்று ஆருத்ரா தரிசன திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் ராமநாதாசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மாணிக்கவாசகர் தங்க கேடயத்தில் உலா வரும் நிகழ்ச்சியும், நடராஜருக்கு சிறப்பு மகா தீப ஆராதனை மற்றும் பூஜைகளும் நடைபெற்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை மறுநாள் ஜனவரி 3 அன்று (சனிக்கிழமை) ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 2 மணியளவில் நடை திறக்கப்பட்டு, 03.00 மணி முதல் 3.30 மணி வரை ஸ்படிக லிங்க பூஜையும், திருப்பள்ளி எழுச்சி பூஜையும், நடராஜருக்கு அபிஷேகமும் நடைபெறும்.
தொடர்ந்து கோயில் மூன்றாம் பிரகாரம் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள சபாபதி சன்னதியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். பின் 4:15 மணிக்கு சபாபதி சன்னதிக்கு மாணிக்கவாசகர் எழுந்தருளை தொடர்ந்து திரை விலகுதல் நடைபெறும். காலை 5:15-க்கு நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் தீபாராதனை நடைபெற்ற பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும்.
காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீநடராஜர் பஞ்சமூர்த்திகளுடன் நான்கு ரத வீதியில் உலா, அதனை தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிவ தீர்த்ததில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஊஞ்சல் நலுங்கு வைபவம் தீபாராதனை அதன்பின் சுவாமி அம்பாள் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.