

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் நேற்று அன்னாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற தீபாராதனை.
அரியலூர்: மூலவர் லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையைப் பெறுவதாகவும், அதனால், ஒரேநேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
அதன்படி, ஐப்பசி பவுர்ணமி தினமான நேற்று தஞ்சாவூர் பெருவுடையார், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில்களில் நேற்று அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில், பக்தர்கள் அளித்த 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
அரிசி மூலம் வடிக்கப்பட்ட சாதத்தை கொண்டு 13 அடி உயர பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றால் பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதில், பக்தர்கள் திரளானோர் பங்கேற்று, நீண்டவரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பின்னர், இரவில் அலங்காரம் கலைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கங்கை கொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த கோயிலில் மூலவராக 60 அடி சுற்றளவும், 13.5 அடி உயரமும் கொண்ட சிவலிங்கம் உள்ளது.
ஐப்பசி பவுர்ணமியையொட்டி, 100 மூட்டை(2,500 கிலோ) அரிசியைக் கொண்டு சாதம் சமைத்து, மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. பிறகு பலகாரங்கள், பழங்கள், பூக்களைக் கொண்டு மூலவர் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர், மூலவர் மீது சாத்தப்பட்ட சாதம் எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதியிருந்த சாதம் அருகில் உள்ள குளத்தில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.