

திருமலை: தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வைகானச ஆகம முறைப்படி, ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற்று வருகிறது. அதாவது, தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி, பிரம்மோற்சவ விழா, வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆனிவார ஆஸ்தானம் ஆகிய முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவதற்கு முந்தைய செவ்வாய்க் கிழமைகளில் இந்த கோயில் ஆழ்வார் திருமஞ்சன சேவையை நடத்துவது ஐதீகம்.
அந்த வகையில், வரும் 19ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு வருவதை முன்னிட்டு, அதற்கு முந்தைய செவ்வாய்க் கிழமையான இன்று காலை ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவை நடைபெற உள்ளது. இதனையொட்டி, இன்று காலை பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பச்சை கற்பூரம் உள்ளிட்ட வாசனை பொருட்களால் கோயில் கர்ப்ப கிரகம் உட்பட பலிபீடம், கொடிக் கம்பம், உப சன்னதிகள், தங்க விமான கோபுரம் என கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்படும்.
அதன் பின்னர் மதியம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் நடை திறக்கப்படும். இதனால் இன்று மதியம் 12 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர். ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, விஐபி பிரேக் தரிசனம், சிறப்பு தரிசனம், திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.