

மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றத்தில் தாழக்கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள திரிபுரசுந்தரி அம்பாள் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழாவின், மூன்றாவது நாளான இன்று அதிகார நந்தி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நகரில் பிரசித்திப் பெற்ற வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இதில் தாழக்கோயில் வளாகத்திலேயே, திரிபுரசுந்தரி அம்பாள் தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
இங்கு, ஆண்டுதாறும் ஆடிப்பூர திருக்கல்யாண பெருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்நிலையில், இந்தாண்டுக்கான திருக்கல்யாண பெருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில், விழாவின் மூன்றாவது நாளான இன்று அதிகார நந்தி உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் திரிபுரசுந்தரி அம்பாள் நந்தி வாகனத்தின் மீது எழுந்தருளினார். மேலும், முக்கிய வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை வழிபட்டனர். மேலும், பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையிலான பணியாளர்கள் மேற்கொண்டனர்.