

சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்த பின் அமைதி கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில், வந்து தங்கியதாகக் கூறப்படுகிறது.
சிறுவாச்சூரில் செல்லியம்மன் வழிபாட்டு தெய்வமாக உள்ளாள். ஒரு மந்திரவாதி, செல்லியம்மனை தனது கட்டுப்பாட் டுக்குள் வைத்து, தீய செயல்களை செய்து கொண்டிருந்தான்.
ஒரு வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் மதுரை காளியம்மன் இத்தலத்துக்கு வந்து, தங்குவதற்கு இடம் கேட்டுள்ளாள். அப்போது செல்லியம்மன், தன்னை தொல்லைப் படுத்தும் மந்திரவாதி குறித்து மதுரை காளியம்மனிடம் கூறுகிறாள்.
மதுரைக் காளியம்மன் செல்லியம்மனைக் காப்பதாக உறுதி கூறி, அங்கேயே தங்கி மந்திரவாதியை அழிக்கிறாள்.
மேலும் செல்லியம்மன், தான் பெரியசாமி மலைக்குச் செல்வதாகவும், மதுரை காளியம்மன் அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்றும் மதுரை காளியம்மனிடம் வேண்டுகிறாள்.
செல்லியம்மன் தனக்கே முதல் மரியாதை வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால், இன்றைக்கும் பூஜையில் தீபாராதனை காட்டும்போது முதலில் மலை நோக்கி மேலே தீபாராதனை காட்டிய பிறகே மதுரை காளியம்மனுக்கு தீபாராதனை காட்டும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் கோயில் திறந்திருக்கும். ‘மதுரை காளியம்மன்’ என்ற பெயர் மருவி ‘மதுர காளியம்மன்’ என்று ஆகியிருக்கிறது.
வடக்கு நோக்கி அமர்ந்துள்ள அம்மனின் நான்கு கரங்களில் உடுக்கை, பாசம், சூலம், அட்சய பாத்திரம் ஆகியவை உள்ளன. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமையில் பூச்சொரிதல் விழா நடைபெறும். அடுத்த செவ்வாய்க்கிழமையில் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா தேரோட்டத்துடன் நடைபெறும்.