

கோப்புப் படம்
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணியசுவாமி (முருகன்) கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்து, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடிக்கிருத்திகை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், திருத்தணி முருகன் கோயிலில் இன்று ஆடிக்கிருத்திகை திருவிழா தொடங்கியது. வரும் 8-ம் தேதி வரை நடைபெற உள்ள இத்திருவிழாவில், இன்று அஸ்வினி திருவிழா நடைபெறுகிறது. அதிகாலையில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிறகு, உற்சவர் முருகப்பெருமான், வள்ளி தெய்வாணையுடன் காவடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
திருவிழாவையொட்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட தமிழகப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திர மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதில், பெரும்பாலான பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை எடுத்து வந்து, முருகனை வணங்கி வருகின்றனர்.
இந்த ஆடிக்கிருத்திகை திருவிழாவில், நாளை ஆடி பரணி திருவிழா கொண்டாடப்படுகிறது, விழாவின் முக்கிய நிகழ்வான, ஆடிக்கிருத்திகை 3 நாள் தெப்பத் திருவிழா, (ஆகஸ்ட் 6ம் தேதி) சரவண பொய்கை திருக்குளத்தில் தொடங்குகிறது. மேலும், ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 6ம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கோயில் வளாகம் மற்றும் திருத்தணி நகரின் முக்கிய இடங்களில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வகையில் தீவிர கண்காணிக்கப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.