

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்காததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சிரமப்பட்டனர்.
சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பழமையான சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர், கோயில் திருப்பணிகள் முடிவடைந்து, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி பிரம்மாண்ட யாகசாலை அமைத்து சேவுகப் பெருமாள் அய்யனாருக்கு 33 குண்டங்கள், பரிவார தேவதைகளுக்கு 8 குண்டங்கள் என 41 குண்டங்களை வைத்து 91 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையை நடத்தினர். முதற்கால யாகசாலை பூஜை மே 30-ம் தேதி தொடங்கி, நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து கடம் புறப்பட்டு, கோயிலை சுற்றி வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கலசங்களுக்கு காலை 10.10 மணிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.கே.பெரியகருப்பன், சிவகங்கை சமஸ்தானம் மதுராந்தகி நாச்சியார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு பேருந்துகள் இயக்காததால் பக்தர்கள் சிரமம்: கும்பாபிஷேகத்தையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் வந்து செல்ல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கும்பாபிஷேகம் முடிந்து ஊருக்கு செல்ல முடியாமல் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருந்தனர்.
மேலும் பேருந்துகளில் ஏறுவதற்கு பயணிகளிடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. சில பேருந்துகளில் ஆபத்தான முறையில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றனர். சிலர் சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து, ஊருக்குச் சென்றனர். பல்லாயிரம் பேர் கூடிய விழாவில் சிறப்பு பேருந்துகளை இயக்காதது பக்தர்கள் இடையே அதிருப்தி ஏற்படுத்தியது.