

ஜெ
ன் குரு குடோ, பேரரசரின் குருவாக நாடெங்கும் புகழ்பெற்றிருந்தார். ஆனால், அவர் ஒரு யாசகரைப் போல ஊர் ஊராகச் சுற்றியலைந்தார். எடோ நகரம் நோக்கிய பயணத்தில் ஒரு நாள் டகினக்கா எனும் சிறு கிராமத்தை வந்தைடைந்தார். அந்தி மங்கும் வேளையில் மழை கொட்டித் தீர்த்தது. குடோ தொப்பலாக நனைந்துவிட்டார். அவர் அணிந்திருந்த வைக்கோற் காலணிகள் ஈரத்தில் நைந்து போய்விட்டன. ஒரு பண்ணை வீட்டுத் தாழ்வாரத்தில் காய்ந்த காலணி ஜோடி ஒன்றைக் கண்டார்.
அந்த வீட்டில் வசித்த குடும்பத் தலைவி, குடோ விரும்பிய காலணியை அவருக்கு கொடுத்துவிட்டு, ஈர உடுப்புகளோடு பிரயாணம் செய்ய வேண்டாமென்றும், அன்று இரவு தங்கள் வீட்டின் தாழ்வாரத்திலேயே தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம் என்றும் கேட்டுக்கொண்டாள். அவளது வேண்டுகோளை ஏற்று குடோ தங்க சம்மதித்தார்.
உறங்கச் செல்வதற்கு முன்னர் வீட்டிலிருந்த குழந்தைகளுடன் பேசிப் பொழுதைப் போக்கினார். வீட்டில் அனைவரின் முகத்திலும் வாட்டம் தொக்கி நிற்பதைக் கண்டு அவர்களிடம் காரணம் கேட்டார்.
குடும்பத் தலைவி தனது கணவன் பற்றிப் பேசத் தொடங்கினாள். “அவர் பெரும் குடிகாரர், சூதாடி. சூதாட்டத்தில் அவர் வென்றுவிட்டால், அவர் நடந்துகொள்வதைச் சகித்துக்கொள்ளவே முடியாது. ஒரு வேளை தோற்றால் அதிக கடன் வாங்கி மீண்டும் விளையாடுவார். சில தினங்கள் மூக்குமுட்டக் குடித்துவிட்டு எங்காவது சாலையில் கிடப்பார். என் கணவரால் நாங்கள் நிம்மதியிழந்து நிற்கிறோம்”.
குடோ, தன்னிடமிருந்த கொஞ்சப் பணத்தைக் குடும்பத் தலைவியிடம் கொடுத்து திராட்சை மதுவும் உணவும் வாங்கிவரச் சொன்னார். எந்தக் கவலையும் வேண்டாமென்று அந்தக் குடும்பத் தலைவிக்கு ஆறுதல் கூறி அவர்களை உறங்கச் செல்லுமாறு கூறினார்.
நடுநிசியில் அந்த வீட்டின் தலைவர் போதையில் தள்ளாடி தன் வீட்டுக் கதவின் முன் நின்றார். போதையில் தடுமாறி தன் மனைவியை அழைத்தார். தாழ்வாரத்தில் தியானித்துக் கொண்டிருந்த குடோ, “நான் உங்களுக்கு சாப்பிட மதுவும் மீன் உணவும் வைத்திருக்கிறேன். நீங்கள் இதை உண்ணலாம்” என்றார்.
அவன் களிப்போடு திராட்சை மதுவை எடுத்து ஒரே மிடறில் விழுங்கிவிட்டு தரையில் சரிந்து சயனத்தில் ஆழ்ந்தான். குடோ அவனருகே அமர்ந்து தியானத்தைத் தொடர்ந்தார்.
காலை வெகுநேரம் கழித்து குடும்பத் தலைவன் கண் விழித்தான். அருகில் ஏகாந்தமாக அமர்ந்திருந்த குருவைப் பார்த்து. “யார் நீ. என் வீட்டுக்கு எப்படி வந்தாய்?” என்று கேட்டான். பதிலுக்கு குரு,“நான் கியோட்டோவைச் சேர்ந்த குடோ. எடோ நகரை நோக்கி யாத்திரை மேற்கோண்டிருக்கிறேன்” என்றார்.
அவன் வெட்கத்தில் கூனிக்குறுகிப் போனான். பேரரசரின் குரு என்பதை அறிந்து தன் நடத்தைக்காக பணிவோடு மன்னிப்புக் கேட்டான்.
அதற்கு குரு, “பூமியில் வாழ்க்கை மிகவும் நிலையற்றது. எதையும் பயனுள்ளதாகச் சாதிக்காமல் சூதாட்டத்திலும் போதையிலும் கழித்தால் உன் குடும்பம்தான் பாதிக்கப்படும்” என்றார்.
குரு எடோவின் உபதேசத்தால் ஞானம் பெற்ற கணவன், “தாங்கள் சொன்னது மிகவும் சரி. உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் செல்லும் வழியில் சிறிது துாரம் உங்கள் உடைமைகளைச் சுமந்து வர அனுமதி தரவேண்டும்” என்றான். குடோ ஒப்புக்கொண்டார்.
இருவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு ஐந்து மைல்கள் கடந்தவுடன் குடோ அவனை வீடு திரும்பச் சொன்னார். “இன்னும் ஐந்து மைல்கள் கடந்த பிறகு திரும்பி விடுகிறேன்” என்றான் அவன். இருவரும் தொடர்ந்தனர்.
குரு, “இப்போது நீ திரும்பலாம்” என்றார்.
”இன்னும் ஒரு பத்து மைல் துாரம் உங்களோடு வருகிறேன்” என்றான் அவன்.
பத்து மைல் துாரம் கடந்த பிறகு குரு அவனை வீடு திரும்பச் சொன்னார். போக மறுத்தவன், “இனி என் வாழ்க்கை முழுவதையும் உங்களை பின்தொடர்வதற்காகவே அர்ப்பணிக்கிறேன்” என்று அறிவித்தான்.
நவீன ஜென் குருக்கள் அனைவரும் ஆசான் குடோவின் அந்த வாரிசிடமிருந்தே பின்னர் தலையெடுத்தனர். அவர் பெயர் மு-நான். அதன் பொருள் திரும்பிப் பார்க்காதவன்.