

ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மகாலட்சுமி தீர்த்தம், கெந்தமாதன தீர்த்தம், கவய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கோடி தீர்த்தம் உட்பட 22 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள தீர்த்தங்களில் தீர்த்தமாடுவதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்விக் கேள்விகளில் சிறந்த குழந்தைகள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
22-வது தீர்த்தமான கோடி தீர்த்தத்தில் நீராடியதன் மூலம் அனைத்து தீர்த்தங்களையும் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், ராமநாதசுவாமி தேவஸ்தானம் சார்பாக பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கோடி தீர்த்தம் 500 மில்லி ரூ.20-க்கு பாட்டிலில் விற்பனை தொடங்கப்பட்டது. இதை பக்தர்கள் வீடு, கடை, தொழில், வர்த்தக நிறுவனங்களில் பூஜை உள்ளிட்ட புனித காரியங்களுக்கு பயன்படுத்துவர்.
இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனம் ஆன்லைன் வர்த்த இணைய தளங்களில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கோடி தீர்த்தத்தை அதிக விலையில் (ரூ. 400 வரை) விற்பனை செய்வது குறித்தும், இதனால் அஞ்சல் துறையின் சார்பில் புனித கங்கை நீர் நாடு முழுவதும் விற்பனை செய்வது போல ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கோடி தீர்த்தத்தையும் அஞ்சல்துறை மூலம் விற்பனை செய்ய வேண்டும் என இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து உடனடியாக ஆன்லைன் வர்த்தக இணையதளங்களில் ராமேசுவரம் கோயில் தீர்த்த விற்பனை தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அஞ்சல் துறை மூலம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் கோடி தீர்த்தம் 100 மி.லி செம்பில் அடைத்தும், 100 கிராம் கற்கண்டு, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள் படம், விபூதி, குங்குமம் அடங்கிய பிரசாதம் ஆன்லைன் வாயிலாக விற்பனைநேற்று முன்தினம் (சனிக்கிழமை) தொடங்கப்பட்டுள்ளது.
இதன் விலை ரூ.145. அஞ்சல் செலவு தனி. இதற்கான கட்டணத்தை பக்தர்கள் www.tnhrce.gov.in என்ற இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் செலுத்தினால் பக்தர்கள் வீட்டுக்கே சென்று வழங்கப்படும் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.