

குஜராத் மாநிலம் ஜுனாகட் மாவட்டத்தில் உள்ளது கிர்னார் மலை. இம்மலை 3,383 அடி உயரமுள்ளது. இது 9,999 படிகள் கொண்ட செங்குத்தான மலை ஆகும்.
இம்மலையை இந்துக்களும் ஜைனர்களும் புனித மலையாகக் கருதுகின்றனர். கலயவன் எனும் அசுரன் மதுரா மீது படையெடுத்து வந்தான். அவன் கிருஷ்ணரைத் துரத்தும்போது கிருஷ்ணர் தன் மேலாடையை மலைக்குகையில் தூங்கிக்கொண்டிருக்கும் முச்குண்டு என்பவன் மீது போர்த்தி விடுகிறார்.
அசுரன், கிருஷ்ணரேயென எண்ணி முச்குண்டை உதைத்து எழுப்பினான். அசுரனைப் பார்த்த முச்குண்டு தன் வரசக்தியால் பார்வையாலேயே அவனை எரித்து விடுகிறான். இவ்வாறு விஷ்ணு புராணத்தில் கூறப்படுகிறது. கிர்னாரில் சிவராத்திரி பிரசித்தி பெற்றது.
ஜைனர்களின் இருபத்திரண் டாவது தீர்த்தங்கரரான பகவான் நேமிநாதருடன் இம்மலை தொடர்புடையது. இவர் கிருஷ்ணரின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். நேமிநாதர் வீர தீரமிக்க அரசர். இவரும் நாகசயனத்தில் நின்று, சங்கு ஊதி, வில்லை ஏற்றி திரி விக்ரமங்கள் செய்தவர். நேமி நாதர் ஒரு நாள் மத யானை மீதேறி நகர் வலம் வரும் போது காட்டு விலங்குகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இருந்து கதறின. நேமிநாதர் அருகிலிருந்தவர்களிடம் இது என்னவென்று கேட்டார். அவர்கள், நீங்கள் திருவிளையாடல் புரிவதற்காக அவை உள்ளன என்றனர். அதைக் கேட்ட கருணையுள்ளம் கொண்ட நேமிநாதர் உலகப் பற்றைத் துறந்து துறவியானார்.
கடும் தவம் செய்து முழுதுணர் ஞானம் பெற்று மக்களுக்கு தரும உபதேசங்கள் செய்தார். பின் ஊர்ஜயந்தி மலையில் 530 முனிவர்களுடன் ஆடி மாதம் சுக்கல பட்சம் சப்தமி சித்திரை நட்சத்திரம் முன்னிரவில் மோட்சமடைந்தார். மலை உச்சியில் பகவான் நேமிநாதரின் பாதங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கி.பி.1128 முதல்1159 வரை கட்டப்பட்ட செவ்வக வடிவமான நேமி நாதர் கோவில், வசுபால், தேஜ்பால் சகோதரர்களால் கட்டப்பட்ட மல்லிநாத தீர்த்தங்கரர் கோவில், 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பகவான் விருஷப தேவர் கோவில், பகவான் பார்சுவநாதர் கோவில் ஆகியவை உள்ளன. ஆகவே ஊர்ஜயந்தி கிரி ஜைனர்களுக்கு முக்கியமான புனிதத்தலமாக விளங்குகிறது.