திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் துவக்கம்
Updated on
1 min read

திருப்பதி: திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருப்பதி நகரின் மையப்பகுதியில் கோவிந்தராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 12-ம் நூற்றாண்டில் இராமானுஜரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் கோவிந்தராஜர் யோக நித்திரை நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். சுவாமியின் காலடியில் ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்துள்ளனர். மேலும், தாயார்கள் புண்டரகாவலி, ஆண்டாள்,பார்த்தசாரதி, பெருமாள், ஆழ்வார்கள் மற்றும் இராமானுஜருக்கான சன்னதிகளும் கோயிலுக்குள் தனி சன்னதிகளாக இடம்பெற்றுள்ளன. தமிழ் மரபுப்படி அமைந்துள்ள இக்கோயிலின் ராஜகோபுரம் 50 மீட்டர் உயரமும், 7 நிலைகளையும் கொண்டதாகும். திருப்பதி ஏழுமலையானின் சகோதரராக கோவிந்தராஜர் கருதப்படுகிறார். இக்கோயில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இக்கோயில் கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடந்து முடிந்த நிலையில், நேற்று வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி, விஸ்வகேசவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தேறின. இதனை தொடர்ந்து கோயில் கொடிகம்பத்தில் கருடன் சின்னம்பொருத்தப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. பண்டிதர்கள் வேதங்கள் ஓத, உற்சவர்களின் முன்னிலையில் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதனை தொடர்ந்து இரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த பிரம்மோற்சவம் வரும் ஜூன் மாதம் 3-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in