

காரைக்குடி: காரைக்குடி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் உடலில் சந்தம் பூசி, கத்தியை வீசியபடி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி செஞ்சை பகுதியில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் சக்தி கரகம், பொங்கல் உற்சவ விழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.
நேற்று மாலை சக்தி கரகம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதற்காக முத்தாலம்மன் கோயில் குளக்கரையில் கரகத்தை வைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து ஆண் பக்தர்கள் குளத்தில் நீராடி உடலில் சந்தனத்தை பூசி, கத்தி வீசியபடி நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக ஊர்வலமாகச் சென்றனர்.
அவர்களை தொடர்ந்து கரகம் எடுத்துச் செல்லப்பட்டது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலை ஊர்வலம் அடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் செஞ்சை, கணேசபுரம், வைத்தியலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.