Last Updated : 03 Jul, 2014 11:14 AM

 

Published : 03 Jul 2014 11:14 AM
Last Updated : 03 Jul 2014 11:14 AM

வாழ்க்கையின் அழகில் வாழுங்கள்

பாலங் கோங் (Falun Gong)சமயம் 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சீனாவில் தோன்றியது மதம். இது சீனாவில் மிகப் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டுவரும் பெளத்தம் உட்பட தாவோயிஸம், கான்பூசியஸம் ஆகிய மதக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டது. 1940களில் கீகாங் என்னும் சமூக இயக்கம் சீனாவில் தொடங்கியது. இதன் நோக்கம் சீனப் பாரம்பரியத் தத்துவச் சிந்தனைகள், தற்காப்புக் கலைகள் ஆகியவற்றைப் பயிற்சியாக மேற்கொண்டு வாழ்க்கை ஆற்றலைப் பெறுவதாகும்.

கம்யூனிஸ்டுகள் உடல் ஆரோக்கியத்திற்காக இந்த இயக்கம் முன்னிறுத்திய பயிற்சியைத் தங்கள் செயல்பாடுகளில் ஒன்றாக்கினர். இந்த இயக்கம் 1970களில் இறுதியில் 20 கோடி பேர் கொண்ட பேரியக்கமாக ஆனது. இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான லீ ஹாங்ஜாய் பாலாங் கோங் சமயத்தைத் தோற்றுவித்தார். மே 13, 1992-ம் ஆண்டு அவர் பாலாங் கோங் சமயத்திற்காகப் பொதுப் பிரார்த்தனையை ஒருங்கிணைத்தார். சமயத்தைத் தோற்றுவித்த அதே ஆண்டிலேயே லீ சீனா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பாலாங் கோங் சமயக் கருத்துகளை சீனாவின் மூலை முடுக்கெல்லாம் பரப்பினார்.

சீனாவின் மரபான தற்காப்புக் கலைகளும் உடல் ஆரோக்கியப் பயிற்சிகளும்தான் லீ அளித்த முக்கியமான பயிற்சிகள். மேலும் அவர் அளித்த இந்தப் பயிற்சிகள் மாற்று வைத்தியமாக அமைந்தது. பயிற்சியின் மூலம் உடலில் நோய் பாதித்த இடத்தை எளிதாகக் கண்டறிந்து குணமாக்க முடிந்தது. அவர் பீஜிங்கில் ஆரோக்கியக் காட்சியகத்தையும் ஒருங்கிணைத்தார். இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பாலாங் கோங் சமயத்திற்கு மேலும் பல கடைப்பிடிப்பாளர்களைப் பெற்றுத் தந்தது. பிறகு லீ சுவீடன், பிரான்ஸ், நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிக்குப் பயணித்து பாலாங் கோங் சமயக் கருத்துகளையும் பயிற்சிகளையும் பரப்பினார்.

இந்தச் சமயம் 1999-ம் ஆண்டு சீனாவில் தடைசெய்யப்பட்டது. பொது ஒழுங்கைக் குலைக்கிறார் என்று லீ மீது குற்றம் சுமத்தப்பட்டது. கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் லீ 1998-ல் அமெரிக்காவின் குடியுரிமை பெற்று நியூயார்க்கில் சமயப் போதனைகளை ஈடுபட்டுவந்ததால் அவரைக் கைதுசெய்ய இயலவில்லை. அவரது பாஸ்போர்ட்டை சீன அரசு முடக்கியது. ஆனால் லீ அமைதிக்காகச் சேவை ஆற்றியதாகப் பல்வேறு சர்வதேச நாடுகளின் பாராட்டையும் விருதுகளையும் பெற்றுள்ளார். 2000-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

பாலாங் கோங் சமயம் முக்கியமாக ஐந்து உடல் பயிற்சிகளைச் சொல்கிறது; நான்கு விதமான நிற்கும் நிலைப் பயிற்சி, அமர்ந்த நிலை தியானப் பயிற்சி.Buddha Showing a Thousand hands, Falun Standing Stance, Penetration of two cosmic extremes, falun Heavenly circulation இவை நான்கும் நின்ற நிலைப் பயிற்சிகளாகும். Strenghening Divine Powers அமர்ந்த நிலையிலான தியான முறையாகும்.

இந்தச் சமயம் தீவிரத்தைப் போதிக்கவில்லை. சமயம் சார்ந்த கருத்துகளிலும் தீவிரமோ வன்முறையோ கூடாது எனப் போதிக்கிறது. எல்லோருக்கும் ஒரு வேலை வேண்டுமெனச் சொல்கிறது. ஒழுங்கான குடும்ப வாழ்க்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது. புகழுக்கோ கவர்ச்சிக்கோ மயங்காத இயல்பான வாழ்க்கையின் அழகில் வாழச் சொல்கிறது. நாம் சார்ந்த சமூகத்துடன் இணைந்து வாழவும் பாலாங் கோங் அறிவுறுத்துகிறது. நாம் வாழும் நாட்டில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழவும் போதிக்கிறது. இதன்போதனைகளின் அடிப்படையில் பார்த்தால் இன்றைய காலத்திற்கான சமயமாக இது இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x