

மாமல்லபுரம்\பொன்னேரி: திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயில்களில் நேற்று நடைபெற்ற திருத்தேர் உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை விழாவின் 7-ம் நாளான நேற்று திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.
இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் நித்ய கல்யாண பெருமாள் தேரின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் வீதிகளில் திருத்தேர் வலம் வந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
பொன்னேரி: இதேபோல், பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி -திரு ஆயர்பாடியில் பழமையான சவுந்தர்யவல்லி சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா, கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவபெருமானும் பெருமாளும் சந்திக்கும் ‘ஹரிஹரன்’ சந்திப்பு திருவிழா கடந்த 8-ம் தேதி நள்ளிரவில் நடைபெற்றது. கரிகிருஷ்ணபெருமாளும், அகத்தீஸ்வரரும் நேருக்கு நேர் சந்தித்த இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இந்நிலையில், தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில், வண்ண மலர்கள், வண்ண துணி மற்றும் வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் காலை 7.15 மணியளவில் தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரிகிருஷ்ணபெருமாள் எழுந்தருளினார்.
தொடர்ந்து, காலை 10. 20 மணியளவில், செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க, திருத்தேர் தேரடியிலிருந்து புறப்பட்டு, தாயுமானவர் தெரு, ஹரிஹரன் பஜார், பிள்ளைக்காரத் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக மாலை 4.30 மணியளவில் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இதில், பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ‘கோவிந்தா... கோவிந்தா.. ‘என்று பக்தி முழக்கமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.இத்தேர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், மோர், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினர்.
இத்தேர் திருவிழாவில், கும்மிடிப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளர் கிரியாசக்தி தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அதுமட்டுமல்லாமல், இந்த பிரம்மோற்சவ விழாவில் வரும் 14-ம் தேதி மாலை தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.