தேவகோட்டை அருகே மயானத்தில் பொங்கல் வைத்து கிடாவெட்டி வழிபட்ட கிராம மக்கள்

தேவகோட்டை அருகே இறகுசேரி கிராமத்தில் மயானத்தில் மண் பானையில் வைக்கப்பட்ட பொங்கல்
தேவகோட்டை அருகே இறகுசேரி கிராமத்தில் மயானத்தில் மண் பானையில் வைக்கப்பட்ட பொங்கல்
Updated on
1 min read

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மயானத்தில் பொங்கல் வைத்து, கிடாவெட்டி கிராம மக்கள் வழிபட்டனர்.

தேவகோட்டை அருகே இறகுசேரி கிராமத்தில் சுடலைமாடன், மஞ்சன பேச்சி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 61 தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாத கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்தாண்டு மே 2-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். பெண்கள் வீட்டில் முளைப்பாரி வளர்த்து வந்தனர். செவ்வாய்க்கிழமை பெண்கள், குழந்தைகள் முளைப்பாரி எடுத்து கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து இரவு அருகேயுள்ள மயானத்துக்கு மேளதாளத்துடன் சாமியாடிகளுடன் கிராம மக்கள் சென்றனர். நள்ளிரவு 12 மணிக்கு மயானத்தில் மண் பானையில் பெண்கள் பொங்கல் வைத்தும், ஆண்கள் கிடா வெட்டியும் வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வந்து, 30 கிடாக்களை வெட்டி 61 சுவாமிகள், 70 சேனைகளுக்கு படையலிட்டனர். வழிபாடு முடிந்ததும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

இந்த விநோத திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். புதன்கிழமை காலை முளைப்பாரியை கோயில் அருகேயுள்ள குளத்தில் கரைத்தனர். பல தலைமுறைகளாக நள்ளிரவில் மயானத்தில் பொங்கல் வைத்து, கிடா வெட்டி வழிபாடு நடத்தி வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in