

திருப்பதி: வசந்தோற்சவத்தையொட்டி, 2-ம் நாளான நேற்று காலை தங்க ரதத்தில் திருச்சானூர் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர வசந்தோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் நாளான நேற்று காலை உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனை தொடர்ந்து தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 4 மாட வீதிகளிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை தரிசித்தனர். இதில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் தேவஸ்தான உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
18-ம் நூற்றாண்டை சேர்ந்த ஏழுமலையானின் தீவிர பக்தையும், பெண் புலவருமான தரிகொண்ட வெங்கமாம்பாவின் 293-வது ஜெயந்தி விழாவை திருப்பதி தேவஸ்தானம் கொண்டாடியது. அதன் நிறைவு நாளான நேற்று திருப்பதி எம்.ஆர் பல்லி பகுதியில் உள்ள வெங்கமாம்பாவின் முழு உருவ சிலைக்கு தேவஸ்தான அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அன்னமாச்சாரியார் கலா மந்திரத்தில் இசைக்கலைஞர் மதுசூதன ராவ் குழுவினர், வெங்க மாம்பாவின் கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
திருப்பதி ஏழுமலையானை நேற்று காலை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி தனது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானத்தினர் தரிசன ஏற்பாடுகள் செய்து, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.